===மதுரை சொக்கன்===                                                                                                                                                      பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது திருமயம் போலீசார் எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளதோடு, சென்னை உயர்நீதிமன்றம், தமிழக காவல்துறையை மிகவும் தரக்குறைவாக பேசியது குறித்து நான்கு வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

திரிபுராவில் ஆர்எஸ்எஸ்- பாஜக வெறியர்களால் மாமேதை லெனின் சிலை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது டுவிட்டர் பக்கத்தில் இதே போல, தமிழ்நாட்டில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த பதிவை தமக்கு தெரியாமல் தன்னுடைய அட்மின் பதிவிட்டு விட்டதாக ஜகா வாங்கினார். யார் அந்த அட்மின், அவர் இன்னமும் அந்தப் பொறுப்பில் தொடர்கிறாரா என்பது குறித்து ராஜா, விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

இப்போது, திருமயம் அருகில் உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலையை சிறுபான்மை மக்கள் வசிக்கும் தெருவின் வழியாகத்தான் கொண்டு செல்வோம் என்று இவர் ஆவேசமாக கத்த, போலீஸ் அதிகாரி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரையை சுட்டிக்காட்ட, தமிழக காவல்துறை முழுவதும் லஞ்சமயமாகிவிட்டது என்றும், டிஜிபி மீதே குட்கா ஊழல் உள்ளது என்றும் கத்திதோடு நில்லாமல், உயர்நீதிமன்றத்தை குறிப்பிட்டு, மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

இது காணொளி காட்சியாக வலம் வந்தது. இப்போது, வழக்கம் போல, ஜகா வாங்கி தாம் பேசியதை யாரோ எடிட் செய்து வெளியிட்டு விட்டதாக கூறியுள்ளார். தமிழகத்தில் சாதாரண கூட்டம் நடந்தால் கூட, காவல்துறை அதை ஒளிப்பதிவு செய்கிறது. இவர், உயர்நீதிமன்றத்தையும் காவல்துறையையும் இழிவாகப் பேசியதும் நிச்சயமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். எச்.ராஜாவிடம் நேரில் கெஞ்சிக் கூத்தாடிய போலீஸ் அதிகாரிகளுக்கும் எச்.ராஜா என்ன வார்த்தைகளை பயன்படுத்தினார் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். அப்படியென்றால், எச்.ராஜாவுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையையே சாரும்.

தன்னுடைய பேச்சை யாரோ எடிட் செய்து விட்டார்கள் என்று கூறும் எச்.ராஜா, அதுகுறித்து காவல்துறையில் இதுவரை புகார் செய்யாதது ஏன்? வாயில் வந்தபடி பேசுவது, கலவரத்தைத் தூண்டுவது, சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் கண்டனம் வந்தால், ‘அது நானே இல்லைங்கறேன்’ என தப்பிப்பது என்பதை இவர் வழமையாக செய்து வருகிறார்.
இவர் மீது வழக்குப் பதிவு செய்த திருமயம் காவல்துறை இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் எச்.ராஜா தலைமறைவாகிவிட்டதாகவும் செய்தி வெளியாகிறது. ஆனால், அவர் தைரியமாக வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

அவருடைய அடிப்பொடி ஒருவர், செய்தி வெளிவந்த பத்திரிகையை எடுத்துக் காட்டி, எங்கள் சிங்கம் எங்கேயும் ஓடி ஒளியவில்லை; இதோ இங்கேதான் இருக்கிறார்; முடிந்தால் பிடித்துப்பார்… என சவால் விடுகிறார். அதை ராஜா ரசித்து சிரிக்கிறார். பேசியவருக்கும் சிரிப்பவருக்கும் சேர்ந்து காவல்துறை பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி. சேகரையும் இப்படித்தான் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்றார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். ஆனால் தனிப்படை அவரை தேடிக் கொண்டே இருந்தது. இதில் கொடுமை என்னவென்றால், எஸ்.வி.சேகருக்கு பாதுகாப்பாக காவல்துறையைச் சேர்ந்த சிலர் சென்று கொண்டே இருந்தனர். மறுபுறத்தில், தனிப்படை தேடிக் கொண்டிருந்தது.

இப்போது எச்.ராஜாவுக்கு சிறப்பு பாதுகாப்பு, அவர் வெறித்தனமாகப் பேசும் கூட்டங்களுக்கு பாதுகாப்பு என போலீஸ் சுற்றிச் சூழ்ந்திருக்க மறுபுறத்தில், அவர் தலைமறைவாக இருக்கிறார்.
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்பதை பாஜகவினர் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றனர். விமானப் பயணத்தின்போது, மாணவி சோபியா, பாஜக தலைவர் தமிழிசையிடம் ‘பாசிச பாஜக ஒழிக’ என்று சொன்னதற்காக அவரை விமான நிலையத்தைவிட்டே வெளியேற விடாமல் கைது செய்தனர். பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், இப்போது தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகிறார், தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் இருப்பதால்தான், எச்.ராஜா இப்படி பேசுகிறார் என முட்டுக் கொடுக்கிறார். இந்தக் கருத்துச் சுதந்திரம் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்களுக்கு, எட்டு வழிச்சாலையை எதிர்த்து போராடுபவர்களுக்கு தரப்பட்டதா? அத்துடன் நில்லாமல், ராஜேந்திர பாலாஜி எச்.ராஜாவுக்கு ரத்தக் கொதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் இலவச ஆலோசனை வழங்குகிறார். இதற்கான செலவை அரசே ஏற்கும் என்று கூட இவர் கூறக்கூடும்.

அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், எச்.ராஜா பேச்சால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை என சப்பைக் கட்டு கட்டுகிறார். செங்கோட்டையில் பாஜக, இந்து முன்னணி கலவரம் செய்வதற்கு தூண்டிவிட்டது எச்.ராஜாதான். இதற்கான வலுவான ஆதாரம் உள்ளது. தந்தைப் பெரியாருக்கு எதிராக தொடர்ந்து இவர் விஷம் கக்குவதால்தான் அவரது பிறந்தநாளன்றே பாஜகவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் பெரியார் சிலை மீது காலணியை பகிரங்கமாக வீசுகிறார். இது சட்டம் – ஒழுங்கு பிரச்சனை இல்லையா? எச்.ராஜாவுக்கு என்று தனியாக சட்டம் உள்ளதா?

இன்னொரு அமைச்சரான ஜெயக்குமார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் யாரையும் கைது செய்ய வேண்டும் என அவசியமில்லை என திருவாய் மலர்கிறார். கோவையில் சூயஸ் கால்வாயுடன் மாநகராட்சி உடன்பாடு செய்து கொண்டு குடிநீர் துரோகம் செய்தது குறித்து பேசுவது கூட குற்றம் என்று அறிவித்தவர்கள் இவர்கள்தான். தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் விசாரணை எதுவும் இல்லாமல் பல ஆண்டுகளாக முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்களே. அவர்களுக்கு ஒரு நீதி, எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?

ஆளுநரின் அரவணைப்பில், பாஜகவின் பாதுகாப்பில்தான், அதிமுக அரசு தொங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு பதவி ஒன்றே குறி. எனவே, தங்களது பொறுப்பில் உள்ள காவல்துறையை திட்டினாலும் கவலையில்லை. நீதித்துறையை அவமதித்தாலும் கவலையில்லை.

ஏற்கெனவே, எச்.ராஜாவுக்கு மனநிலை சரியாக உள்ளதா என்று ஆய்வு நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இப்போது, இவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு அடிப்படையில் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது முந்தைய வழக்கை விரைவுபடுத்தி விசாரித்து சோதனை செய்து அதன் முடிவையாவது தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.