==ஜி.ராமகிருஷ்ணன்===
ஆற்று மணலையும், தாது மணலையும் கொள்ளையடிக்க அனுமதித்து கொள்ளையர்களிடமிருந்து கமிஷன் பெற்ற ஆளும் அரசியல்வாதிகள் தற்போது தண்ணீரை விலை பொருளாக வியாபாரம் செய்திட பன்னாட்டு கம்பெனிக்கு பரிசாக (ஒப்பந்தமாக) அளித்துள்ளனர்.

நிலத்தடி நீரையும் ஆற்றுப்படுகையில் ஆழ்குழாய் மூலம் உறிஞ்சி எடுக்கும் தண்ணீரையும் தொட்டிகளில் ஏற்றி பல நகராட்சிகள் குடிநீராக வழங்குகின்றன. ஆனால், கோவையில் அப்படி அல்ல; சிறுவாணியிலிருந்து கால்வாய் மூலம் ஓடி வரும் அந்த அணையின் நீர் இயல்பாக தொட்டியில் பாய்ந்து அங்கிருந்து மாநகரத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கோவை மாநகருக்கு சிறிதும், பெரிதுமாக உள்ள சிறுவாணி உள்ளிட்ட 11 அணைகளிலிருந்து குடிநீர் கிடைக்கிறது. வேறு எந்த மாநகரத்துக்கும் இல்லாத ஒரு வாய்ப்பு இது. இத்தகைய இயற்கையின் கொடையாக உள்ள தண்ணீரைத்தான் பிரெஞ்சு சூயஸ் கம்பெனிக்கு கோவை மாநகராட்சியும், மாநில அரசும் தாரை வார்த்துள்ளது.

மக்களுக்கு தெரியாமல் ஒப்பந்தம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பில் இல்லாத நேரத்தில் மக்களின் கருத்தறியாமல் அவசர, அவசரமாக மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் 24.11.2017 அன்று சூயஸ் கம்பெனியுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்தார்கள்.

வெளிச்சத்திற்கு வராத இந்த ஒப்பந்தம் பற்றி எழுத்தாளர் முருகன் தனது முகநூலில் பதிவிட்டதை அறிந்து, விபரங்களை சேகரித்து தண்ணீரை வியாபாரமாக்கும் சூயஸ் ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான தீக்கதிர் முதன் முதலாக அம்பலப்படுத்தியது.

அடுத்த 26 ஆண்டுகளுக்கு ரூ. 3100 கோடிக்கு கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஒப்பந்தம் அந்த பன்னாட்டுக் கம்பெனிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசும், மாநகராட்சியும் குடிநீர் வழங்கும் பொறுப்பை தட்டிக்கழித்து அதை தனியாருக்கு தாரை வார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது; ஒப்பந்த நகலை வெளியிடுங்கள் என தொடர்ந்து குரலெழுப்பியபோதும் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட மறுத்தது.

மாநகராட்சி நிர்வாகம் மிரட்டல்
மக்கள் மத்தியில் எதிர்ப்பு உருவான போது, கோவை மாநகராட்சி, நாளேடுகளில் முழுபக்கம் விளம்பரம் கொடுத்து சூயஸ் கம்பெனி 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் என்றும், குடிநீர் கட்டணத்தை சூயஸ் கம்பெனி தீர்மானிக்காது; மாநகராட்சி தான் தீர்மானிக்கும் என்றும், இந்த ஒப்பந்தத்தை யாராவது எதிர்த்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியது. அப்போதும் கூட ஒப்பந்த நகலை வெளியிடவில்லை. எதிர்ப்பு சூடுபிடிக்கத் துவங்கிய போது 800 பக்கங்களைக் கொண்ட மூன்று தொகுதிகளாக உள்ள ஒப்பந்த நகலை யாரும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு நகல் படம் (ஸ்கேன்) எடுத்து மாநகராட்சி நிர்வாகம் பதிவேற்றம் செய்தது.

சூயஸ் ஒப்பந்தம் பற்றி நகராட்சிகள் நிர்வாகத்துறை செயலாளர் பிரகாஷ் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோவை மாநகரத்தில் தற்போது இயங்கி வரும் 1500 பொது குழாய் இணைப்புகள் ரத்து செய்யப்படும் என்றும், வீடுகளின் பரப்பளவை கணக்கில் கொண்டு குடிநீர் கட்டணம் தீர்மானிக்கப்படும் என்றும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

குழாயைத் தொட்டாலே காசுதான்
மாநகர் முழுவதும் உள்ள 1.5 லட்சம் இணைப்புகளும், அது சார்ந்த நீர்மானிகளையும் (மீட்டர்) புதிதாக மாற்றப் போகிறார்கள். புதிய நீர்மானிகள் மின்சார வாரிய மீட்டர்கள் போல குடிநீர் குழாயைத் தொட்டாலே ஓடும். இதற்காக ஆகும் செலவை வீட்டு உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும். இதனால் வாடகைக்கு குடியிருப்போர் நிலை படுமோசமாகி விடும்.
ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே அது வரையில் குடிநீர் இணைப்புக் கட்டணம் ரூ. 1000/-மாக இருந்ததை ரூ. 5000/-மாக மாநகராட்சி உயர்த்தியது.

எதிர்காலத்தில் மனையளவை கணக்கில் கொண்டு இக்கட்டணத்தை ரூ. 10000/-, ரூ. 15000/-மாக உயர்த்துவார்களாம். ஒப்பந்தம் 26 ஆண்டுகளுக்கானது. முதலாண்டு ஆய்வு, அடுத்த நான்காண்டுகள் கட்டுமானப்பணி. கட்டுமானப் பணி முடிந்த பிறகு தான் மொத்த திட்டத்திற்கான செலவைத் தீர்மானிக்க முடியும் என்று நிர்வாகச் செயலாளர் கூறினார். அப்படியானால் ஆய்வு துவங்குவதற்கு முன்னதாகவே மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் கம்பெனிக்கு ரூ. 646 கோடி வழங்கியது ஏன்? இதற்கு மேலும் கட்டுமான செலவிற்காக கூடுதல் தொகை சூயஸ் கம்பெனி கேட்டால் மாநகராட்சி தர வேண்டும் என ஒப்பந்தத்தில் ஷரத்து உள்ளதே, அது ஏன்?

கட்டணத்தை தீர்மானிக்கப் போவது யார்?
மாநகராட்சி ஆணையரும், நகராட்சிகள் நிர்வாகச் செயலாளரும் மீண்டும் மீண்டும் குடிநீர் கட்டணத்தை சூயஸ் கம்பெனி தீர்மானிக்காது என்று கூறுகிறார்கள். ஆனால், மாநகராட்சி கையெழுத்திட்ட சூயஸ் ஒப்பந்தத்தில் குடிநீர் கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரம் சூயஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

“மொத்த விலை குறியீட்டு எண் மற்றும் நுகர்வோர் குறியீட்டு எண் ஆகியவற்றின் அடிப்படையில் விலை உயர்வை காரணமாக காட்டி அதற்கேற்றவாறு குடிநீர் கட்டணத்தை உயர்த்திட வேண்டுமென்று சூயஸ் கம்பெனி கோரினால் அதை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஷரத்து ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது. சூயஸ் கம்பெனி தீர்மானிக்கும் கட்டணத்தை மாநகராட்சி ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற ஷரத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொண்ட பிறகு கட்டணத்தை மாநகராட்சி தான் தீர்மானிக்கும் என்று திரும்பத், திரும்பச் சொல்வது மக்களை ஏமாற்றுவதற்காகவே. இது எப்படி உள்ளது என்றால் ‘மாப்பிளை அவர் தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது’ என்ற ரஜினிகாந்த் – செந்தில் நகைச்சுவைக் காட்சி போன்று உள்ளது.

சூயஸ் தீர்மானிக்கும் கட்டணத்தை மாநகராட்சி உத்தரவாக பிறப்பிக்கும் என்ற ஷரத்து ஒப்பந்தப் பிரிவு 22.1.1‘ஏ’யில் தெளிவாக உள்ளது. கோவை மாநகராட்சி – சூயஸ் ஒப்பந்தம் தண்ணீரை வியாபாரப் பொருளாக ஆக்கி விட்டது.

எல்லாம் காண்ட்ராக்ட் மயம்
இந்தியாவில் பல மாநிலங்களில் குடிநீர் வழங்குவது தனியார் கம்பெனிகளுக்கு காண்ட்ராக்ட்டுக்கு விடப்பட்டது தோல்வியில் முடிந்தது என்பது மாநில அரசுக்கும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தெரியாதா?

கோவை மாநகராட்சியில் ஏற்கனவே அனைத்து பணிகளும் காண்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், குப்பைக் கிடங்கு பராமரித்தல், கணிணி பதிவு, வசூல், பூங்கா பராமரிப்பு என அனைத்தையுமே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநகராட்சி நிர்வாகம் தனியாருக்கு கொடுத்து விட்டது. தற்போது குடிநீர் வழங்குவதையும் பன்னாட்டு கம்பெனிக்கு கோவை மாநகராட்சி காண்ட்ராக்ட் விட்டுள்ளது. சொல்லப்போனால் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் பதவி தவிர அனைத்தும் காண்ட்ராக்ட்டுக்கு விடப்பட்டுள்ளது.

விரட்டியடிக்கப்பட்ட பன்னாட்டுக் கம்பெனிகள்
கோவைக்கு அருகில் உள்ள திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பெயரில் குடிநீர் வழங்கும் பொறுப்பை பெக்டெல் நிறுவனத்திற்கு மாநகராட்சி அளித்து, அந்த நிறுவனத்துடன் ரூ. 871.5 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் எவ்வித பயனும் அளிக்காததால் ரத்து செய்யப்பட்டது. இதனால் பெருத்த நட்டத்தை திருப்பூர் மாநகராட்சி ஏற்க வேண்டியதாகி விட்டது.

“மக்களின் அடிப்படை உரிமையான தண்ணீர் விநியோகத்தை தனியாருக்கு அளிப்பதில் அரசு மிகவும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறிருக்க, பொலிவிய மக்களால் துரத்தியடிக்கப்பட்ட பெக்டெல் என்ற வட அமெரிக்க நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்தது ஏன்?” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ராமசுப்பிரமணியம் 2014ம் ஆண்டு தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

பொலிவியாவில் உள்ள கொச்சபம்பா நகரத்தில் குடிநீர் வழங்கும் காண்ட்ராக்ட், மேற்கண்ட பெக்டெல் கம்பெனிக்கு வழங்கப்பட்டு கட்டணத்தை இக்கம்பெனி உயர்த்தியதால் தாக்குப்பிடிக்க முடியாத மக்கள், பெக்டெல் கம்பெனியை விரட்டியடித்தார்கள்.பொலிவியாவில் எல் ஆல்தோ, லா பாஸ் ஆகிய பெரிய நகரங்களில் தண்ணீர் வழங்கும் காண்ட்ராக்ட் இதே சூயஸ் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. ஆனால் கட்டணத்தை பல மடங்கு சூயஸ் கம்பெனி உயர்த்தியதால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் பல மாநிலங்களில் குடிநீர் வழங்கும் பொறுப்பு தனியாருக்கு அளிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்ட ஏராளமான உதாரணங்கள் உண்டு.1998ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநில அரசு (தற்போதைய சத்தீஸ்கர் மாநிலம்) மகாநதியின் கிளை நதியான சிவநாத் ஆற்றையே காண்ட்ராக்ட்டுக்கு விட்டது. விவசாயிகள் போராட்டத்தினால் இந்த ஒப்பந்தம் ரத்தானது.

2008ம் ஆண்டு மராட்டிய மாநிலம் லத்தூர் நகரத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பொறுப்பு ஒரு தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டு தண்ணீர் கட்டணத்தை அந்த நிறுவனம் பல மடங்கு உயர்த்தியதால் அந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நகராட்சியே குடிநீர் வழங்குகிறது.

2008ம் ஆண்டு மைசூர் நகர குடிநீர் விநியோகம் டாட்டா குழுமத்தின் கம்பெனியான ஜஸ்கோவிற்கு வழங்கப்பட்டு மக்கள் எதிர்ப்பினால் ரத்து செய்யப்பட்டது.
2012ம் ஆண்டு நாக்பூர் நகர குடிநீர் விநியோகம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வியோலியா கம்பெனிக்கு வழங்கப்பட்டு மக்கள் எதிர்ப்பினால் அதுவும் ரத்தானது.

உலகத்தின் பல நாடுகளிலும் நமது நாட்டில் பல மாநிலங்களிலும் தண்ணீர் விநியோகம் உள்நாட்டு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு காண்ட்ராக்ட்டுக்கு விடப்பட்டு, சம்பந்தப்பட்ட தனியார் கம்பெனிகள் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் நடத்திய எழுச்சியான போராட்டத்தால் மீண்டும் நகராட்சிகளே குடிநீர் வழங்கும் பொறுப்பை ஏற்றன.
தற்போது கோவை மாநகராட்சியில் மட்டுமல்ல, தமிழகத்தில் வேறு பல நகரங்களிலும் சூயஸ் கம்பெனியிடம் தண்ணீர் விநியோகத்தை காண்ட்ராக்ட் விடுவதற்கு மாநில அரசு பரிசீலித்து வருதாக தகவல்கள் வருகின்றன.

கோவை மாநகரத்து அனைத்துப்பகுதி மக்களும் சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து மாநகராட்சியே குடிநீர் வழங்குவதை தொடர வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய பின்னணியில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்தய மாணவர் சங்கம், தீணடாமை ஒழிப்பு முன்னணி, மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பு உள்ளிட்ட அனைத்து வர்க்க, வெகுஜன அமைப்புகள் இணைந்து கோவை மாநகரத்தில் மாநகராட்சி –

சூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து குடிநீர் எமது உரிமை! சூயஸ் நிறுவனமே வெளியேறு!!
என்ற முழக்கத்தோடு இன்று (செப். 18) முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றன.
அனைத்துப் பகுதி மக்களும் அணி திரண்டு வாரீர்!

கட்டுரையாளர் :சிபிஎம்,அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்

Leave a Reply

You must be logged in to post a comment.