மேட்டுப்பாளையம்,
பெள்ளாதி குளக்கரையை விதிகளுக்கு புறம்பாக சேதப்படுத்தி அமைக்கப்பட்ட வழித்தட பாதையை மூடி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு பேனரை இரவோடு இரவாக மர்ம கும்பல்கிழித்து வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதி பெள்ளாதி குளத்தின் கரையினை சேதப்படுத்தி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு ஒரு சிலர் வழித்தட பாதை அமைத்தனர். இதனால் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள நூற்றைம்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிகப்பெரிய குளம் பாதிக்கப்படும், மழைக்காலங்களில் இதன் கரை உடைந்தால் பெரும் சேதங்கள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சட்டவிரோதமாக நடைபெறும் இந்த குளக்கரை பாதை குறித்து கடந்த செப்.9 ஆம் தேதியன்று தீக்கதிரில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து களத்தில் இறங்கிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்ட பாதையை மீண்டும் மண் கொட்டி மூடியதோடு, குளத்தின் கரையை சேதப்படுத்தி பாதை அமைக்க கூடாது, மீறினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்பு பேனரையும் வைத்தனர்.

ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைத்த எச்சரிக்கை அறிவிப்பு பேனரை சனியன்று இரவு மர்ம கும்பல் கிழித்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அப்பகுதி மக்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, அறிவிப்பு பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், சட்டவிரோத வழித்தடப்பாதை அமைக்க கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: