உலகின் பிற பகுதிகளில் தண்ணீர் தனியார்மயமாகலை எதிர்த்துப் போராடி மக்கள் தமது உரிமையை நிலை நாட்டிய வரலாற்றைப் பார்த்தோம். இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட தண்ணீர் விநியோகம், மீண்டும் நகராட்சி வசம் வந்தடைந்துள்ளது. இந்த வெற்றி நமது மக்களின் வலிமையான போராட்டங்களுக்குச் சான்று கூறுவதோடு, ‘தண்ணீர் மக்களின் அடிப்படை உரிமை’ என்பதை நிலைநாட்டிய மக்களின் மீது நன்மதிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. உலகெங்கிலும் பொதுத்துறையே மிகத்திறமையாக தண்ணீர் விநியோகத்தைச் செயல்படுத்துகிறது என்பதால், கடந்த 15 ஆண்டுகளில் மட்டுமே 35 நாடுகளில் 180 நகரங்களில் தண்ணீர் நிர்வாகம் தனியாரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. நீர் நிர்வாகத்தை மீண்டும் நகராட்சிமயமாக்குவதே (Re-Municipalisation) சிறந்த தீர்வு என்று டிரான்ஸ் நேஷனல் இன்ஸ்டிட்யூட் (TNI) மேற்கொண்ட ஆய்வு நிறுவியுள்ளது.

உலகமயத்தின் விளைவுகள்:
உலகமயம் ஒரு வரம் என்றும், உலகம் ஒரு சிறு கிராமமாக சுருங்கிவிடும் என்றும், அதனால் பெரும்பான்மை மக்கள் பயனடையப் போகிறார்கள் என்றும் தொண்ணூறுகளில் பலர் பிதற்றிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மூன்றாமுலக நாடுகளில் மீத மிருக்கும் இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் சுரண்டுவதற்கான எளிமையான வழிதான் உலகமயம் என்பது கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் வெட்டவெளிச்சமாகிவிட்டது. சுருங்கியது விவசாய உற்பத்தியும், விவசாயக் கூலியும், நீர்நிலைகளும், வேலைவாய்ப்புகளும், கிராமப்புற தற்சார்புத் தொழில்களும், நகர்ப்புற சிறு தொழில்களுமே. உலகமயத்தால் பன்மடங்கு விரிந்து பெருகியுள்ளவை ஆளும் வர்க்கத்தின் – அதிகாரவர்க்கத்தின் சொத்துக்கள். வர்க்கங்களிடையே ஏற்றத்தாழ்வுகள் அஞ்சத்தகுந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. கிராமங்களிலும் நகரங்களிலும் தொழில்கள் அழிந்து, தற்சார்பு அழிந்து உதிரிகளாக நகர குடிசைப் பகுதிகளில் தஞ்சமடையும் மக்கள்தொகை பெருமளவு உயர்ந்துள்ளது.

உலக வங்கி (World Bank), பன்னாட்டு நிதியம் (IMF) ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), சர்வதேச வளர்ச்சிக்கான வட அமெரிக்க முகமை (USA ID) போன்ற நிதி நிறுவனங்கள் நீண்டகாலக் கடன்களை அளித்து வளரும் நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கின்றன. காலப்போக்கில் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்தக் கடன்களை வாங்கும்படி நாடுகளை ஊக்குவிக்க, நிதி நிறுவனங்கள் சிலமுன்னேற்பாடுகளைச் செய்து கொள்கின்றன.

(அ) பன்னாட்டு நிதி நிறுவனங்கள் பல்வேறு ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் நாடுகளுக்கு / மாநில அரசுகளுக்கு பெருந்தொகையைக் கடனாக அளிக்கின்றன.

(ஆ) திட்டத்தின் மதிப்பில் (Plan Uotiny) ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை லஞ்சமாக உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒப்பந்தம் பெறும் கம்பெனி மூலமாகக் கொடுக்கின்றன.

(இ) திட்டமிடும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை ஒப்பந்தம் பெறும் பன்னாட்டு நிறுவனத்தின் ஆலோசகராகப் பதிவு செய்து, அவர்களுக்கு மதிப்பூதியம் உள்ளிட்ட (Hono -rarium) பணப்பலன்கள் வழங்குகின்றன. இவ்வாறு பன்னாட்டு நிதி நிறுவனக்கடன்களைப் பெற்று வழங்க அரசு சில தொழில் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது:

1) Jnnurm – ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம்.

2) Didssmt – சிறு மற்றும் நடுத்தர நகரங் களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்.

3) Smart City – ஸ்மார்ட் சிட்டி திட்டம்.

மேற்சொன்ன தொழில் நிறுவனங்களிட மிருந்து கடன்களைப் பெறுவதற்கு மாநில அரசுகள் ‘சிறப்பு நோக்கத்திற்கான செயல் அமைப்புகள்’ சிலவற்றை உருவாக்க வேண்டு மென உலக வங்கி ஆலோசனை வழங்கியது. அதன்படி எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது, முனிசிபல் சேவைகளில் தனியாரை அனுமதிப்பது, நகர்ப்புற கட்டமைப்பு – வளர்ச்சிப் பணியில் தனியாரை ஈடுபடுத்துவதும் தொடங்கியது. உலக வங்கி ஆலோசனைப்படி இந்தியாவில் முதன்முதலில் ‘சிறப்பு நோக்கத்திற்கான செயல் அமைப்பு’ (Special Purpose Vehicle) ஒன்றை 1993ஆம் ஆண்டு ஏற்படுத்திய மாநிலம் கர்நாடகா. தொடர்ந்து பிற மாநிலங்களும் அவற்றை ஏற்படுத்தின.

1) கர்நாடகா நகர்ப்புற மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் (Kuidfc)

2) தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சிக் கழகம்.

3) ஆந்திரப் பிரதேச நகர்ப்புற சீரமைப்பு & முனிசிபல் சேவைத் திட்டம்

4) குஜராத் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்

5) மேற்கு வங்கம் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்

6) பஞ்சாப் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்

இந்த சிறப்பு நோக்கத்திற்கான செயல் அமைப்புகள் (SPVs) கம்பெனி சட்டத்தின் கீழ் வரும் வரம்புக்குட்பட்ட தனியார் கம்பெனிகள். (Private Limited Companies under the Companies Act). இவை முனிசிபாலிட்டிக்கு பதில் சொல்லத் தேவையில்லை. அரசு நிர்வாக அமைப்புகளை “அரசிடமிருந்து விடுவித்து” அவற்றை “சந்தை மயமாக்கும்” வித்தையை உலக வங்கி உலகெங்கும் அரங்கேற்றியது இப்படித்தான் – மாநில அரசுகள் பல்வேறு “வளர்ச்சித் திட்டங்களை” செயல்படுத்த சிறப்பு நோக்கத்திற்கான செயல் அமைப்புகளின் மூலமாக பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்று ஒப்பந்தம் பெறும் கம்பெனிகளிடம் அளிக்கின்றன. அவற்றுள் சில:

1) வியோலியா வாட்டர் (இந்தியா) லிமிடெட் (VW (I) L)

2) ஜாம்ஷெட்பூர் யுடிலிடீஸ் அண் சர்வீசஸ் கம்பெனி (JUSCO)

3) எம்.எஸ்.கே. புராஜக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் (MSKP (I) L)

4) ஆரஞ்சு சிட்டி வாட்டர் பிரைவேட் லிமிடெட் (OCW (P) L)

5) ரேடியஸ் வாட்டர் லிமிடெட் (RWL)

சர்வதேச நிதி நெருக்கடியைப் பயன்படுத்தி பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தண்ணீர் தனியார்மயமாதலை மென்மேலும் வலியுறுத்துகின்றன. அதை அடியொற்றியே இந்திய அரசின் 2002 ஆம் ஆண்டு தேசிய தண்ணீர்க் கொள்கையும் உருவாக்கப்பட்டது. ஆனால் நெருக்கடி எந்தளவுக்கு அதிகரித்த போதிலும் மக்கள் தண்ணீர் தனியார் மயத்தை எதிர்த்துப் போராடியபடியே உள்ளனர். மக்களின் சமரசமற்ற போராட்டங்களால், பலநகரங்களில் பன்னாட்டுக் கம்பெனிகள் நகரைவிட்டே அல்லது நாட்டை விட்டே ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதற்கு நம்மிடம் பல சான்றுகள் உள்ளன.

தனியார்மயத்தை எதிர்த்து மக்கள் வெற்றிபெற்ற வரலாறு
1) 1998 – சிவநாத் ஆறு (மத்தியப் பிரதேச மாநிலம்)
மகாநதியின் ஆகப்பெரிய கிளையான சிவநாத் ஆறு மத்தியப் பிரதேச மாநிலம் (தற்போதைய சத்தீஸ்கர் மாநிலம்) துர்க் மாவட்டத்தில் 23.5 கிலோமீட்டர் நீளத்திற்கு ஓடுகிறது. இந்த ஆற்றை காங்கிரஸ் முதல்வர் திக் விஜய்சிங் ‘ரேடியஸ் வாட்டர் லிமி
டெட்’ என்ற தனியார் நிறுவனத்திடம் விற்றுவிட்டார். விலைக்கு விற்கவும் வாங்கவும் ஆறென்ன தனியார் சொத்தா, அது இயற்கை வளமல்லவா என்று நாம் கேட்கலாம். துர்க் மாவட்டத்திலுள்ள ‘போராய்’ தொழில் நகருக்கு 22 ஆண்டுகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய உரிமை பெற்ற ரேடியஸ் நிறுவனம், உடனடியாக ஆற்றின் இரு கரைகளிலும் வேலியிட்டு மக்கள் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் தடுத்தது. நகரில் குடியிருந்த 800 விவசாயக் குடும்பங்களும் 200 மீனவக் குடும்பங்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்ததால் போராட்டத்தைத் தொடங்கினார்கள். மக்களது நியாயமான போராட்டத்தை ஆதரித்து ‘நதி – கதி – மோர்ச்சா’ என்ற சத்தீஸ்கர் மாநில மக்கள் இயக்கம் கடுமையாக வாதாடியது. ஆற்று நீரை விற்பனை செய்தது சட்டத்திற்குப் புறம்பானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆற்று நீரைப் பயன்படுத்தும் உரிமை மீண்டும் மக்களுக்குக் கிடைத்தது.

2) 2004 – தில்லி நகரம்
‘தில்லி குடிநீர் வடிகால் சட்ட திருத்தங்கள் முன்வரைவு’ 2004 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் தில்லி நீர் வாரியத்தைத் தொழில் நிறுவனமாக ஆக்கவும் அதன் சொத்துக்களை கைமாற்றவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது. இதனை ‘தனியார்மயத்திற்கு எதிரான பரப்புரைக் குழு’ கண்டறிந்தது. தில்லி மின்வாரியத்தை தனியாருக்கு விற்றதைப்போல, தண்ணீர் வாரியத்தையும் தனியாருக்கு விற்பதற்கான முயற்சியே சட்டத்திருத்தத்தின் நோக்கம் என்று கருதியது. இந்த ஐயத்தை உறுதி செய்வதுபோல் தண்ணீர் வரி பத்து மடங்கு உயர்த்தப்பட்டது. உலக வங்கி நிதியுடன் ‘கடப்பர்’ என்ற பன்னாட்டு நிறுவனத்திடம் தில்லி நீர் வாரிய தண்ணீர் விநியோக உரிமையை அளிக்கவே தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது என்று காரணம் சொல்லப்பட்டது. கொதித்தெழுந்த சமூகப் போராளிகளும் மக்கள் திரள் அமைப்புகளும் ஒன்றிணைந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் இந்தத் திட்டம் குறித்த ஆவணங்களைப் பெற்றார்கள். ஆவணங்களை ஆராய்ந்த, மக்களுக்கு எதிரான கொள்கைகளையும் திட்டங்களையும் உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிதி நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசுத் துறைகள் தீட்டியிருப்பதை மக்கள் பார்வைக்கு வைத்தார்கள்.

தில்லி வாழ் மக்களிடம் கலந்து பேசாமல்,அவர்களுடைய கருத்தை மதிக்காமல் தில்லியின் நீர் ஆதாரங்களை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்து நீர்த் தொழிலாளர் கூட்டமைப்பும், நீர் உரிமைப் போராட்டக் குழுவும் தலைமையேற்க, மக்கள் தொடர்ந்து ஓராண்டு காலம் போராடினார்கள். போராட்டத்தின் விளைவாக தில்லி நகர நீர் விநியோகத் திட்டத்திற்காக உலக வங்கியிடம் கடன் கோரும் விண்ணப்பம் மாநில அரசால் திரும்பப் பெறப்பட்டது. தண்ணீர் தனியார் வசமாவதைத் தடுத்ததோடு, பன்னாட்டு நிதியங்களின் கோரப்பிடியில் சிக்காமல் மாநில அரசைக் காப்பாற்றிய தில்லி மக்களின் வலுவான போராட்டம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வகையில் தில்லி மக்கள் நமக்கு சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கிறார்கள்.

3) 2008 – லத்தூர் நகரம் (மகாராஷ்டிர மாநிலம்)
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் நகருக் கான தண்ணீர் விநியோக உரிமை முன் அனுபவம் ஏதுமற்ற ‘சுபாஷ் புராஜெக்ட்ஸ் அண் மார்க்கெட்டிங் லிமிடெட் (Subash Projects and Marketing Limited) என்ற தனியார் (தில்லி தலைமையிடம்) நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. தொடக்கம் முதலே இதனை எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் எதிர்த்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் புதிய மீட்டர் பொருத்தப்பட்டு அதற்குகட்டணம் வசூலிக்கப்பட்டது. தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. கட்டணம் செலுத்தாமல் மக்கள் வீறுகொண்டு போராடினார்கள். 2012ஆம ஆண்டு தண்ணீர் விநியோகம் மீண்டும் பொதுத்துறையிடமே தரப்பட்டது.

4) 2008 – மைசூர் நகராட்சி (கர்நாடக மாநிலம்)
ஒரே ஆண்டில் (2008) பல நகராட்சிகளின் தண்ணீர் விநியோக ஒப்பந்தங்களை JUSCO என்ற டாடா குழுமத்தின் கம்பெனி வென்றது. ஆனால் பல நகரங்களில் கம்பெனி முறையாக தண்ணீர்விநியோகம் செய்யவில்லை. 2013ஆம் ஆண்டுமைசூர் நகராட்சி இந்தக் கம்பெனிக்கு ஏழு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மைசூர் மக்களின் மிகப்பெரிய போராட்டங்களால் கம்பெனி நகரை விட்டு வெளியேற்றப்பட்டது. தண்ணீர் விநியோக உரிமை மீண்டும் மைசூர் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

5) 2012 – நாக்பூர் நகராட்சி (மகாராஷ்டிர மாநிலம்)
பல நகரங்களில் தண்ணீர் விநியோகம் மீண்டும் நகராட்சிக்கு மாறிவந்த வேளையில், 2012ஆம் ஆண்டு நாக்பூர் நகராட்சியின் குடிநீர் விநியோகம் சார்ந்த அனைத்துப் பணிகளும் வியோலியா என்ற பிரெஞ்சு நாட்டு தனியார் கம்பெனிக்கு தாரைவார்க்கப்பட்டது. நாக்பூர் நகரவாசியும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான நிதின் கட்கரியின் நல்லாசியும், ஆதரவுமே இந்த ஒப்பந்தம் வியோலியா கம்பெனிக்கு வழங்கப்படக் காரணம். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தக் கம்பெனியால் நாக்பூர் நகருக்கு முறையாக குடிநீர் வழங்க முடியவில்லை. தண்ணீருக்கான கட்டணம் மட்டுமே அதிகரித்துள்ளதால் நாக்பூர் மக்களும்,மக்கள் திரள் அமைப்புகளும் தனியார்மயத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். வியோலியா கம்பெனியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். நாக்பூர் மக்களின் தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிரான போராட்டங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரெஞ்சு நாட்டில் 2013ஆம் ஆண்டிற்கான “மிக மோசமான கார்ப்பரேட் நிறுவனம்” என்ற விருது வியோலியா கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடனாளியாகி நிற்கும்  திருப்பூர் நகராட்சி:
திருப்பூர் நகராட்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் பரிந்துரைத்த ‘பெக்டெல்’ நிறுவனம், தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என்பதோடு, நகராட்சிக்கு சுமார்ரூ.871.5 கோடி ரூபாய் கடனையும் ஏற்படுத்தியது. பொலிவியா என்ற சின்னஞ்சிறிய ஏழை லத்தீன் அமெரிக்க நாட்டில், மக்களுக்கு ஓரளவு ஜனநாயக உரிமைகள் இருந்தன. அதனால் அவர்கள் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்தி, 96 சதவீத மக்களின் தீர்ப்புக்கிணங்க ‘பெக்டெல்’ நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிந்தது. அதைத் தொடர்ந்து தண்ணீர் சட்டமே திருத்தப்பட்டு தண்ணீர் விநியோக உரிமை ‘செபாமா’ என்ற புதிய தண்ணீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்கிற இந்தியாவில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலில் வாக்களிப்பது தவிர வேறெந்த உரிமைகளும் மக்களுக்குக் கிடையாது. அதனால்தான்திருப்பூரில் ‘பெக்டெல்’தண்ணீர் விநியோகம் செய்யத் தவறியபோதும், நாம் கடன்பட்டவர்களாக இருக்கிறோம்.

தண்ணீர் தனியார்மயத்தை ஒழிக்க  கேரளம் காட்டும் மாற்றுப் பாதை:
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஒலவன்ன கிராம மக்கள் தற்சார்புள்ள நீர் மேலாண்மை – விநியோக முறையை உருவாக்கி இருக்கிறார்கள். இது உலகமயத்திற்கும் தனியார்மயத்திற்கும் சிறந்த மாற்று. இந்த கிராமத்தின் மக்கள்தொகை 45,000மலைப் பகுதியிலுள்ள இந்த கிராமத்தில் ஓடும் ஆற்று நீரும் உப்பாக உள்ளதால் குடிநீராகப் பயன்படுத்த முடியவில்லை. வீடுகளில் தோண்டப்பட்ட கிணறுகளிலும் உப்பு நீரே சுரந்தது. குடி தண்ணீருக்காக மலைப்பிரதேசத்தில் வெகு தொலைவு செல்ல வேண்டியிருந்தது. இந்தப் பிரச்சனையை ஒலவன்ன கிராமமக்கள் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார்கள். அப்பகுதியில் இருந்த பல குக்கிராமங்களின் மக்கள் தங்களிடையே ஒரு ‘பயனாளிகள் குழு’வை உருவாக்கிக் கொண்டார்கள். குழுக்களின் முன்முயற்சியால் நன்னீருக்கான வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, கிணறுகள் தோண்டப்பட்டன.

‘வெட்டு வேடன் குன்று’ என்ற குக்கிராமத்தில் முதன்முதலாக வெற்றிகரமாக தண்ணீர்ப் பிரச்சனை தீர்க்கப்பட்டது. மக்கள் தமது செலவிலேயே நன்னீர்க் கிணறுதோண்டி, அந்த நீரைத்தேக்கி வைக்க தண்ணீர்த் தொட்டியையும் கட்டினார்கள். பயனாளிகள் குழுவே தண்ணீர் விநியோகத்தையும் தொட்டியின் பராமரிப்பையும் கவனித்துக் கொண்டது. மக்களின் முன்முயற்சியை ஊக்குவிக்க, இந்தத் திட்டத்திற்கான மாதாந்திர செலவின்ஒரு பகுதியை கிராமப் பஞ்சாயத்து ஏற்றுக் கொண்டது. வெட்டுவேடன் குன்று முன் மாதிரியைப் பின்பற்றி பல குக்கிராமங்களில் தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.ஒலவன்ன கிராம மக்களின் முயற்சியால் வெற்றியடைந்த ‘மக்கள் குடிநீர்த் திட்டத்தை’ கேரள மாநில இடதுசாரி அரசு வெகுவாக ஊக்குவித்தது. மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் 35 முதல் 40 சதவீதம் நிதியை தன்னாட்சி அதிகாரம் கொண்ட கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு ஒதுக்கீடு செய்தது. பஞ்சாயத்துகளின் வளர்ச்சித் திட்டங்களின் அனைத்து நிலைகளிலும் பங்கேற்குமாறு உள்ளூர் மக்களிடம் பரப்புரையும் செய்தது. இது அதிகாரப்பரவலுக்கும் மக்களை அதிகாரப்படுத்துவதற்கும் வழி செய்தது. அதிக நிதி முதலீடு செய்து பெரிய அளவில் தண்ணீர் விநியோகத்திட்டம் செயல்படும்போது, தண்ணீர் வீணாவதும் திருடப்படுவதும் தவிர்க்க முடியாதது. உள்ளூர் மக்களின் திறமைகளையும் பட்டறிவையும் பயன்படுத்தி, கிராம அளவில் திட்டங்களை வகுத்து செயல்படுத்தினால், மிகக்குறைந்த செலவில் வெற்றிகரமாக தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என்பதை ஒலவன்ன கிராம அனுபவம் நிரூபித்தது.

உள்ளூர் மக்களின் தன்னாட்சி செயல்பாடுகளுடன் அரசு இணைந்து கொள்ள ‘ஒலவன்ன கிராம மாதிரி’ வழி செய்கிறது. இது பொதுத்துறை – பொதுமக்கள் கூட்டாண் மைக்குச் சான்று (Public – Public Partnership). மக்களுக்கான சேவைத் துறைகளிலிருந்து அரசை முற்றிலுமாக விலக்கி, மக்களின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பறித்துவிடும் உலகமய – தனியார்மய அழிவுப்பாதைக்கு இதுவே மாற்று.கோவை மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கக் காரணம் தண்ணீர்த் திருட்டை மாநகராட்சியால் தடுக்க முடியாததே என்று தமிழக அரசு கூறுகிறது. மேலும் சூயஸ் ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே ஆயிரம்ரூபாயாக இருந்த குடிநீர் இணைப்புக் கட்டணம் சென்ற 2017 நவம்பர் மாதத்தில் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது வீடுகளின் மனையளவுக்கு ஏற்ப இணைப்புக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை வசூலிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாநகராட்சி புதைத்துள்ள தண்ணீர்க் குழாய்களை அகற்றிவிட்டு சூயஸ் நிறுவனம் புதிய குழாய்களையும், பயனீட்டு மானியையும் (மீட்டர்) பொருத்தப்போகிறது. சேதமடையப் போகும் கோவை மாநகர சாலைகளைச் சீரமைக்க எத்தனை ஆயிரம் கோடி செலவாகும், அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தினால் என்னாகும் என்று நினைத்துப் பார்த்தாலே வயிறு கலங்குகிறது. புதிய மீட்டரில் கணக்குப் பார்த்து ஒரு லிட்டருக்கு விலை நிர்ணயம் செய்து வசூலித்தால், தண்ணீர்க் கட்டணம் மாதத்திற்கு எவ்வளவு செலுத்த நேரும் என்று நினைத்தால் தலையே சுற்றுகிறது. தற்போது கோவையில் குடிநீர் விநியோகத்திற்கு ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் செலவாகிறதாம். அதைக் குறைக்கவே சூயஸ் நிறுவனத்திற்கு 2,300 கோடி ரூபாய் கடன் வாங்கி ஒப்பந்தம் போடப்பட்டதாம். அடுத்த 25 ஆண்டுகள் சூயஸ் கோவையில் தண்ணீர் விநியோகம் செய்யுமாம்.

ரூபாய் பதினைந்தாயிரம் இணைப்புக் கட்டணமும், லிட்டருக்கு இத்தனை ரூபாய் என்று தண்ணீர்க் கட்டணமும் செலுத்தும் வசதியில்லாத கோவையின் ஏழை மக்களுக்கு, இனி குடிநீர் எட்டாக் கனியாகிவிடும். உலகெங்கும் தண்ணீர் விநியோகம் குறித்த ஆய்வு முடிவுகள் நகராட்சி மயமாதலுக்கு ஆதரவாகஇருக்கையில், கோவை மாநகரத்திற்கான தண்ணீர் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நீர் வீணாவதையும் திருடப்படுவதையும் தடுக்க முடியவில்லை என்ற காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை நிவர்த்தி செய்ய எளிய வழிகள் உள்ளன. பகுதிவாரியாக தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்தவும், தண்ணீர் வீணாகாமல் தடுக்கவும் தேவையான கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். குழாய்களில் உள்ள உடைப்பு, கசிவு போன்றவற்றை நீக்க பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிர் மேலாண்மை குறித்த உள்ளூர் மக்களின், அனுபவம் வாய்ந்த பொறியாளர்களின் அறிவையும் திறமையையும் பயன்படுத்தி, திறம்பட செயல்பட்டால், தண்ணீரை சேமிக்கவும், தடையின்றி மக்களுக்கு விநியோகிக்கவும் முடியும். கேரள மாநிலம் ஒலவன்ன கிராம மக்களின் வெற்றிகரமான முன்முயற்சியும், அதனை ஊக்குவித்து செயல்படுத்திய மாநில அரசின் நடவடிக்கையும் நமக்குச் சொல்லும் செய்தி இதுவே.இந்தியாவின் பல மாநிலங்களில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட தண்ணீர் விநியோகத் திட்டங்கள் படுதோல்வியடைந்துள்ளன என்பதைப் பார்த்தோம். அவற்றுள், திருப்பூர் மாநகர குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டம் தோல்வியடைந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ராமசுப்பிரமணியம் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

“மக்களின் அடிப்படை உரிமையான தண்ணீர் விநியோகத்தை தனியாருக்கு அளிப்பதில் அரசு மிகவும் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறிருக்க, பொலிவிய மக்களால் துரத்தியடிக்கப்பட்ட ‘பெக்டெல்’ என்ற வட அமெரிக்க நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்தது ஏன்? பொலிவியாவின் கொச்சபம்பா நகரிலும், தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ் பர்க் நகரிலும் தண்ணீர் தனியார் மயமாகியதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளைக் குறித்து அரசுக்குத் தெரியாதா? ஜோஹன்ஸ்பர்க் நகரின் ஏழை மக்கள் தண்ணீர்க் கட்டணம் செலுத்தும் வசதியற்றவர்கள் என்பதால் அம்மக்களுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பற்ற தண்ணீரைப் பருகி ஏழை மக்கள் காலரா நோய் கண்டு இறந்து போனார்கள்.”

இவ்வாறு ஆதாரங்களை முன்வைத்து நீதிபதி தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்துள்ளார். உலகெங்கிலும் தனியார் வசமான தண்ணீர் விநியோகம் தோல்வியடைந்துள்ளதையும், இந்தியாவில் பிற மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் திருப்பூர் நகரிலும் தோல்வியடைந்துள்ளதையும், திருப்பூர் தோல்வி குறித்த நீதிபதியின் அறிவிப்பையும் புறக்கணித்து விட்டு தமிழக அரசு செயல்படுவது ஏன்? மூன்றாண்டு காலத்தில் மீண்டும் கோவை மாநகரில் தண்ணீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துக்கு அளித்ததேன்? எந்த முன் அனுபவத்திலிருந்தும் பாடம் கற்க மறுக்கும் தமிழக அரசுக்கு மக்கள்தமது உறுதியான போராட்டங்கள் மூலம் பாடம் கற்பிக்க வேண்டும். அதுவே மக்களின் தலையாய கடமை. சூயஸ் நிறுவனம் கோவையில் கால் பதிக்காமல் தடுப்பதும், கோவை மாநகராட்சியை தொடர்ந்து திறம்பட தண்ணீர் விநியோகம் செய்ய வைப்பதும் இப்போது கோவை மக்கள் கையில்தான் இருக்கிறது.இந்தியப் பிரதமர் மோடி, “இந்தியாவில் தயாரியுங்கள்” (Make in india!)என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகையில்,மக்களின் அடிப்படை உரிமையான தண்ணீரை விநியோகிக்க பிரான்சு நாட்டு சூயஸ் கம்பெனி எதற்கு?

 

தண்ணீர் தனியார்மயத்தால் விளையும் தீமைகள்:

1) தண்ணீர்க் கட்டணம் பல மடங்கு உயரும். வழங்கப்படும் தண்ணீரின் தரமும், அளவும் குறையும். பயனாளிகள் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது.

2) ஒப்பந்தங்கள் 25-30 ஆண்டுகளுக்கு போடப்படுவதால் தனியாருக்கு நீர் ஆதாரங்கள் மீது ஏகபோக உரிமை அளிக்கப்படுகிறது. பங்குதாரர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள், அவர்களைத் திருப்திப்படுத்தவே கட்டணஉயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பயனாளிகளைத்
திருப்திப்படுத்துவது கம்பெனிகளின் கடமையல்ல.

3) ரகசியமாக, சட்டதிட்டங்களை மீறியே தனியாருடனான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படுவதால் ஊழலும் சேவை மறுப்பும் தவிர்க்க முடியாது போகும். பொதுச் சொத்துக்களின் மீதான உள்ளூர் மக்களின் கட்டுப்பாடும் உரிமைகளும் பறிபோகும்.

4) பன்னாட்டு நிதியங்களிடமிருந்து வட்டிக்கு வாங்கப்படும் பல நூறு கோடி ரூபாய் கடனும் வட்டியும் அரசுக்கு ஆண்டுதோறும் பெருஞ்சுமையாக உருவெடுக்கும். முதலீடு செய்யப்படும் தொகை தனியார் கம்பெனிகளின் லாபக்கணக்கில் சேர்ந்துவிடும்.

5) விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் வசதியற்ற ஏழை மக்கள், தண்ணீர் இல்லாமல் தவிக்க நேரிடும்.

6) பெரும் எண்ணிக்கையில் வேலையிழப்பு நிகழும்.

7) நீண்டகால ஒப்பந்தங்களால் ஏகபோக உரிமை பெறும் கம்பெனிகளிடமிருந்து நீர் ஆதாரங்களை மீட்பது மிக மிக கடினமானது.

8) கம்பெனிகளின் வசமாகும் நீர் நிலைகளிலிருந்து தண்ணீர் மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படும் அபாயத்தைத் தடுக்க முடியாது.

9) அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்போது சூழலியல் சமன் குலைந்து பெரும் அழிவுகள் நேரும். சமூகப் பொருளாதாரம் சீரழியும்.

10) ஒருமுறை துப்புரவாக காலி செய்யப்பட்டால் அல்லது மாசடைந்து விட்டால் நீர் ஆதாரங்களைப் புதுப்பிக்க இயலாது.

 

தண்ணீர் விநியோகத்தில் தனியார் கம்பெனிகள் தோல்வி அடைவதற்குரிய காரணங்கள்:

1) கட்டமைப்பு வசதிகளில் போதிய முதலீடு செய்யப்படுவதில்லை.
2) கட்டண உயர்வு பல மடங்கு அதிகரிக்கிறது.
3) நுகர்வோர் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ற சேவை வழங்கப்படுவதில்லை.
4) வாக்களித்தபடி முறையாக நீர் விநியோகம் செய்யப்படுவதில்லை.

எனவே திட்டத்தைத் தொடர்வதைவிட, ஒப்பந்தத்தை ரத்து செய்து மீண்டும் நகராட்சியே பணியை மேற்கொண்டால் குறைந்த நட்டமே ஏற்படும் என்ற காரணத்தால் 2000-2014 ஆண்டுகளுக்கிடையே 92 திட்டங்களில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. 69 திட்டங்களில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் தண்ணீர் விநியோகம் நகராட்சி நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.

 

நன்றி! காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2018

Leave A Reply

%d bloggers like this: