கோவை,
குடிநீரை வணிகப்பொருளாக மாற்றும் கோவை மாநகராட்சியின் நடவடிக்கையை கண்டித்து ஞாயிறன்று வாலிபர், மாதர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

கோவை மாநகர மக்களுக்கான குடிநீரை பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி 26 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு தாரைவார்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி செப்.18 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டல அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என இந்திய தொழிற்சங்க மையம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்போராட்டத்தின் அவசியம் குறித்து கோவை மாநகரம் முழுவதும் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன்ஒரு பகுதியாக தண்ணீர் எங்கள் உரிமை – சூயஸ் நிறுவனமே வெளியேறு என்கிற முழக்கத்துடன் கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ஞாயிறன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. உடையாம்பாளையத்தில் துவங்கிய பிரச்சார இயக்கம் சரவணம்பட்டி, காளப்பட்டி, பன்னாரியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு நேருநகர் பகுதியில் நிறைவடைந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ்எஸ்.குளம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கோபால், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சந்திரசேகர், செயலாளர் சங்கர், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர் விஜியலட்சுமி, மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.புனிதா உள்ளிட்ட பலர் பிரச்சார இயக்கத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

Leave A Reply

%d bloggers like this: