திருவள்ளூர்,
அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வாலிபர் சங்கத்தினர் இளைஞர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி 24மணி நேர தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் பொன்னேரியில் திங்களன்று(செப்.17) அன்று போராட்டத்திற்காக வாலிபர்கள் கூடியிருந்தனர்.  அப்போது, காவல்துறையினர், தர்ணாபோராட்டத்திற்கு அனுமதியில்லை எனக் கூறினர். மேலும் வாலிபர் சங்கத்தினால் பொது அமைதி கெட்டுவிடும் என கூறிக் கடிதம் ஒன்றைநிர்வாகிகளிடம் காவல்துறையினர் கொடுத்தனர். இதற்கு வாலிபர் சங்க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் 2 மணி நேரம் மட்டும் போராட்டம் நடத்திக்கொள்ளலாம் என காவல்துறையினர் அனுமதித்தனர்.

இதனைத் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.கங்காதரன், பொருளாளர் எஸ். விஜயகுமார்,முன்னாள் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.மதன், எஸ். மோசஸ்பிரபு, டி.சண்முகசுந்தரம், கே.குமரேசன், பகுதித் தலைவர் கே.நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அரசாணை 56-ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: