இந்திய பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு மன் கி பாத் (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி. தங்கள் அரசின் அபார சாதனை பாரீர் என பெருமிதப்பட்டுக் கொண்டார். ஆனால், பிரதமர் பேசிய அடுத்த சில நாட்களிலேயே அவரின் அறிவிப்பிற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சாரத்துறை பொறியாளர்கள் அமைப்பு ஒரு பட்டியலை வெளியிட்டது. இதில், தமிழகம் முழுவதும் மின்சார வசதி இல்லாத 60 கிராமங்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டிருந்தன. உண்மையில் பட்டியலில் விடுபட்டுள்ள கிராமங்கள் இன்னும் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். அதேநேரம், இவ்வமைப்பினர் வெளியிட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் மட்டும் அன்புநகர், மாவடைப்பு, சின்னார்பதி, சின் கோனா, சங்கரன்குடி, சர்க்கார்பதி, நாகருத்தூ, நவமலை, எருமைப்பாறை, கோழி கமுத்தி உள்ளிட்ட 15 மலைவாழ் கிராமங்களில் மின்சாரமே இதுவரை எட்டிப்பார்க்கவில்லை.

கோவை மாவட்டம், ஆழியாறு அணை அருகே உள்ள அன்பு நகரில் எரவாளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 80 வீடுகள் இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நாற்பதாண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருகின்றனர். ஆழியாறு அணைக்காக தங்களது விவசாய நிலங்களை இலவசமாக கொடுத்துவிட்டு தற்போது வாய்க்காமேடு பகுதியில் மின்சாரம் இல்லாமல் வசித்து வருகின்றனர். தமிழக அரசு இவர்கள் கொடுத்த விவசாய நிலங்களுக்கு பதிலாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வீடுகட்ட நிலம் கொடுப்பதாக சொல்லியுள்ளது. ஆனால் நிலமும் கிடைக்கவில்லை, இருக்கும் இடத்திற்கு மின்சாரமும் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அம்மாசை என்பவர் கூறுகையில், இங்குள்ள மக்கள் பெரும் பகுதி கூலிவேலை பார்த்து வாழ்க்கை நடத்திவருகிறோம். நாற்பது வருடங்களாக எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காகவாவது தெருவிளக்கு அமைத்துக் கொடுங்கள் என்று நடையாய் நடந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை எவ்வித ஏற்பாடுகளும் அரசு செய்து தரவில்லை. ஒரு சோலார் விளக்கை நடுவில் வைத்துக் கொண்டு அனைத்து பிள்ளைகளும் அதனை சுற்றி அமர்ந்துதான் இப்போதுவரை படித்துக் கொண்டிருக்கின்றனர். நாங்க இப்பவரைக்கும் இருட்டுலதான் இருக்கோம். சீமெண்ணையும் கிடைக்கறது இல்ல. டிஜிட்டல் இந்தியாவில் இருக்கிறதா நீங்கதான் சொல்லிக்கணும், கரண்ட் இல்லாம எப்படிசார் டிஜிட்டல் இந்தியா ஜொலிக்கும் என்றார் அப்பாவியாக.இதேபோல், அன்புநகர் வள்ளியம்மா கூறுகையில், மின்சாரம்தான் தங்களுக்கு பெரிய பிரச்சனை. அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என மோடி சொல்லி என்ன பண்றது. எங்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கலயே. நாங்களும், யார் யாரயோ பிடிச்சு பார்த்துட்டோம், எதுவும்வேலைக்கு ஆகல என்றார் ஆதங்கத்தோடு.

செல்போனின் வெளிச்சத்தில் படிப்புவீட்டுக்கு மின்சாரமும் இல்ல. ரோடு வசதியும் இல்ல. அரசு கட்டிக் கொடுத்த வீடுகளும் பழுதாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. மராமாத்து பணிகள் செய்யக்கூட அரசு உதவவில்லை என்கிறார் சின்னார்பதி கிராமத்தைச் சேர்ந்த சடையன். எங்க அப்பா அம்மா கூலி வேலைக்கு போறாங்க. நான் 8-வது படிக்கிறேன். இடிஞ்ச வீட்லதான் தங்கியிருக்கோம். இங்க மின்சாரம் இல்ல. செல்போன் வெளிச்சத்துலதான் படிக்கிறோம். காலையில் ஸ்கூலுக்கு போகும்போது இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள செக்போஸ்ட்டுல செல்போனை கொடுத்து சார்ஜ் போட்டுக் கொண்டுதிரும்பி வரும்போது வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து அந்த லைட்லதான் நான் படிப்பேன் என கபடமற்ற சிரிப்போடு கூறுகிறார் மோகினி.இதேபோல் டாப் சிலிப் அருகேஉள்ள கோழி கமுத்தி, எருமைப்பாறை, சங்கரன் குடி போன்ற பகுதிகளில் வசிப்போர் கூறுகையில், பலரும் வாக்குக் கேட்டு வந்தனர். அப்போது, மின்சாரம் கொடுப்போம் என்று வாக்குறுதியும் கொடுத்தனர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றபிறகு, இங்கு யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை. மேலும், மின்சாரம் மட்டுமில்ல. கல்வி தொடங்கி கழிவறை வரை அடிப்படை பிரச்சனைகள் அனைத்துக்குமே அவதிப்பட்டுதான் வருகிறோம் என ஆவேசமாக தெரிவிக்கின்றனர்.

-அ.ர.பாபு

Leave a Reply

You must be logged in to post a comment.