சென்னை,
செங்கோட்டை வன்முறைக்கு சங்பரி வாரின் திட்டமிட்ட சதியே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இறை நம்பிக்கையுள்ளோர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் போது எவ்வித வன்முறையும் ஏற்படுவதில்லை. ஆனால் சங்பரிவார் விநாயகர் சதுர்த்தியை தனது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தி சமூக அமைதியை சீர்குலைக்க சதி செய்து வருகிறது. இந்த ஆண்டு அவர்கள் தேர்ந்தெடுத்தது செங்கோட்டையை. விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்கள் முன்பாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா வன்முறையைத் தூண்டும் வகையிலும், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும் பகை மூளும் வகையிலும் பேசியிருக்கிறார். காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்போதைய சூழல் ஏற்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. பின்னர் விசாரணையில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்தவர்களே ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு குண்டுவைத்துவிட்டு, இஸ்லாமியர்கள் மீது சந்தேகத்தையும், வெறுப்பையும் உருவாக்குவதற்காக தடயங்களை செயற்கையாக உருவாக்கியது அம்பலமானதோடு, அந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள்.  அதேபோன்ற ஒரு நிலையை செங்கோட்டையில் ஏற்படுத்துவதற்கு சங்பரி வார் அமைப்புகள் சதித் திட்டம் தீட்டி அதை நிறைவேற்றியிருப்பதை அறிய முடிகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னால் தென்காசியில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று பலர் காயமடைந்துள்ளனர். வாகனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சேத மடைந்துள்ளன. இன்றும் தென்காசி பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. உரிய முன்னெச்சரிக்கையுடன் காவல்துறை செயல்பட்டு வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் தென்காசியில் வன்முறை சம்பவங்களை தடுத்திருக்க முடியு மென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எச். ராஜாவிடம் போலீஸ் பவ்வியம் காட்டுவது ஏன்?
எச். ராஜா நீதிமன்றத்தை அவதூறாகவும், துச்சமாகவும், பேசியுள்ளதோடு, காவல்துறை யையும் மிகக் கேவலமாக விமர்சித்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை ராஜாவிடம் பவ்வியம் காட்டுவது, வன்முறையாளர்களின் திட்டத்திற்கு காவல்துறை பயந்து நிற்பதையே வெளிப்படுத்துகிறது.  தமிழக அரசு உடனடியாக அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், வன்முறை யில் ஈடுபட்டவர்கள், தூண்டியவர்கள், சதித் திட்டம் வகுத்து கொடுத்தோர் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மக்களை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு இடம் தராமல், எதிர்த்து நிற்கும் அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுவதோடு, மக்களுக்கிடையில் வெறுப்பையும், வன்மத்தையும் உருவாக்கும் சக்திகளை புறக்கணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய வன்முறை சம்பவங்கள் மக்களுக்கு நாசத்தையும், நஷ்டத்தையுமே ஏற்படுத்தும் என்பதே வரலாற்று ரீதியான உண்மை என்பதைப் புரிந்து கொண்டு அனைத்துப் பகுதி மக்களும் அமைதி சூழல் உருவாகிட ஒத்துழைப்பு தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

Leave A Reply

%d bloggers like this: