சென்னை,
பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளதற்கு ஆதாரம் வெளியாகியுள்ளதால் அவர் மீது தமிழக அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: ‘‘பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தமிழக காவல்துறையினரைக் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் அடாவடித்தனமாகப் பேசியிருப்பதுடன் உயர்நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

காணொளி ஆதாரத்துடன் இவை வெளியாகியுள்ளன. தமிழகத்தின் அமைதியை குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

ஜெயக்குமார் பேட்டி
இந்நிலையில், சென்னையில் ஞாயிறன்று (செப்.16) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘எச். ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

எச்.ராஜா புலம்பல்:
இதனிடையே எச்.ராஜா செய்தியாளர்களி டம்பேசுகையில், தமது பேச்சை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டதாக பச்சையாக பொய்பேசியுள்ளார். நீதிமன்றத்தின் மீது தாம் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும் நீதிமன்றத்தை திட்டி தாம் பேசவில்லை என்றும் அவர் பல்டி அடித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.