ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் மதவெறியர்களை வீழ்த்தி இடதுசாரி அணியை மகத்தான வெற்றி பெறச் செய்திருப்பதன் மூலம் இடதுபாதையே இந்தியாவின் பாதை என்பதை உரத்துச் சொல்லியிருக்கிறார்கள் மாணவர்கள்.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று தில்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகும். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகம் உட்பட மத்திய பல்கலைக்கழகங்களை குறி வைத்து தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. இதற்கு காரணம், நாட்டின் உயர் கல்வி நிலையங்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஜனநாயகக் குரலையும், முற்போக்கு கருத்துக்களையும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பதே ஆகும். குறிப்பாக நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஈர்ப்பு சக்தியாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் ஜனநாயகப் பூர்வமான மற்றும் முற்போக்கான செயல்பாடுகளும் இயக்கங்களும் அமைந்துள்ளன. இன்னும் குறிப்பாக இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் இயக்கங்கள் நீண்டகாலமாக மாணவர்கள் மத்தியில் அரசியல் செல்வாக்குடன் திகழ்ந்து வருகின்றன. ஆளும் அரசுகளின் நாசகர கல்விக் கொள்கைகளையும் மோசமான பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்து இந்த அமைப்புகள் நாடு முழுவதும் மாணவர்களை அணிதிரட்டி வருகின்றன.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உட்பட உயர்கல்வி நிலையங்கள், மத்திய அரசின் மோசமான கொள்கைகளை எதிர்க்கும் போராட்டக் களங்களாக திகழ்வதற்கு இடதுசாரி மாணவர் இயக்கங்கள் இங்கு உயிர்ப்புடன் செயல்படுவதே காரணமாகும். இத்தகைய பின்னணியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்பட மத்திய பல்கலைக்கழகங்களில் இடதுசாரி மற்றும் தலித் மாணவர் இயக்கங்களை ஒழிப்பதற்கு மோடி அரசு தீவிரமான முயற்சிகளை கடந்த நான்காண்டுக்கும் மேலாக மேற்கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் – பாஜகவின் மதவெறிமாணவர் அமைப்பான ஏபிவிபியை ஏவிவிட்டுபல்கலைக்கழக வளாகங்களை வன்முறைக் கூடங்களாக மாற்றுவதற்கான முயற்சியும் மேற்கொண்டுள்ளது. இத்தகைய பின்னணியில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், மதவெறி ஏபிவிபியை தொடர்ந்து உறுதியோடு எதிர்த்துவருகிறார்கள். இந்த உறுதிப்பாட்டை, தற்போதைய மாணவர் பேரவைத் தேர்தலிலும் வெளிப்படுத்தியுள்ளனர். மோடி அரசு கல்வி நிலையங்களில் ஜனநாயகத்தை பறித்து, உயர் கல்வி அமைப்புகளை காலில் போட்டு மிதித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பல்கலைக் கழக மானியக் குழுவை கலைப்பதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டையும் கடுமையான முறையில் வெட்டி குறைத்துள்ளது. அங்கன் வாடி குழந்தைகளுக்கும் கூட நிதியை வெட்டியுள்ளது. இத்தகைய கேடுகெட்ட கல்விக் கொள்கைக்கு எதிரான கடும் எச்சரிக்கையே இடது மாணவர் அணியின் வெற்றி.

Leave a Reply

You must be logged in to post a comment.