அரியலூர்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சௌந்திரராசனால் கட்டப்பட்ட பெரியார், அண்ணா அரங்க வளாகத்தில் பெரியார், அண்ணா, திருவள்ளுவர், புரட்சிப்பாவலர் பாரதிதாசன், காமராசர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், காமராஜர் சிலை யை திறந்து வைத்து பேசியதாவது: தமிழகத்தில் கல்வியின் அவசியத்தை கருதியே மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தப் பட்டது. இதையடுத்து 1960இல் ஒருவேளை உணவுக்காக பள்ளிச் செல்லா சிறுவர்கள் கல்வி பயில முன்வந்த னர். பிறகு 1980-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அதனை மேலும் உயர்த்தும் வகையில் ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்து சத்துணவு திட்டம் பற்றி அறிக்கை தயார் செய்ய சொன்னார். திட்டம் தயாராக உள்ளது அதற்கான பணம் இல்லையே என்று கூறிய அதிகாரி களை பார்த்து எம்ஜிஆர் கேட்டார், நீங்கள் எப்போதாவது ஒரு வேளை பட்டினிக் கிடந்து இருக்கிறீர்களா, நான் கிடந்து இருக்கிறேன். அதனை நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த திட்டத்தினை தயார் செய்யுங்கள் என்று அதிகாரிகளிடம் கூறினார். அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தியாவில் 13600 கிராமங்களில் பள்ளிக்கூடம் இல்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதில் தென் தமிழகத்தில் மட்டும் 47 கிராமங்கள் அடங்கும். தற்போது நடக்கும் ஆட்சியில் சுமார் 3000 பள்ளிகளை மூட திட்டமிட்டு உள்ளார்களாம். காரல்மார்க்ஸ் 200 ஆண்டுக்கு முன்பே கல்வி வேண்டும் என்று மட்டும் கூறவில்லை; தரமான கல்வி அனைவருக்கும் வேண்டுமென்று அப்போதே கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.மணி வேல், மாவட்டக்குழு உறுப்பினர் கே.மகாராசன், இளவரசன், ஒன்றியச் செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: