சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
விவசாயிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கும் பணியை மத்திய மாநில அரசுகள் இணைந்து செய்து வருகின்றனர். இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்கி எப்படியாவது 8 வழிச்சாலையை அமைத்தியட வேண்டும் என முயன்று வந்தது.

இதற்கிடையே எட்டு வழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு சுற்றுசூழல் அமைப்பினர்  நீதிமன்றத்தை அணுகினர்.  இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி அன்று விசாரணைக்கு வந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், பாமக தரப்பிலும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். நிலம் கையகப்படுத்தும் பணி நடத்தப்படமாட்டாது என தமிழக அரசும், மத்திய அரசும் உத்தரவாதம் கொடுத்தன.

நிலம் கையகப்படுத்தும் பணிக்கும், அளவிடும் பணிக்கும் தடை விதித்த நீதிபதிகள் மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பணிகளுக்கும் தடை தொடரும் என்று உத்தரவிட்டு வழக்கை செப்.11-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர். 11-ம் தேதி வழக்கில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டதை அடுத்து தனியார் நிலத்தை அவர்களுக்குத் தெரியாமல் கையகப்படுத்துவது சரியாக இருக்காது, நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் எட்டு வழிச்சாலைக்கு எவ்வளவு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன?, எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன? முடிந்துள்ள அளவீடு பணிகள் என்ன? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மதிப்பீடு முடிந்து அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப் 14-க்கு ஒத்திவைத்திருந்தனர். அதன் படி செப்டம்பர் 14 ம் நாளான இன்று வழக்கு மீண்டும்  நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சென்னை -சேலம் எட்டு வழி சாலைக்கான வழித்தடத்தின் அகலத்தை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  மத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் தற்போதைய நிலையில் பொது மக்களிடம் கருத்து கேட்பது, சுற்றுச்சூழல் மதிப்பீடு உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்யபட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.

அந்த பணிகளை நிறைவு செய்யாத நிலையில் நில எடுப்பு நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், திட்டத்தை இறுதி செய்யும் வரை நில எடுப்பு நடவடிக்கைகள் 2 வார காலத்திற்கு மேற்கொள்ளப்படாது என்று உறுதி அளித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

சென்னை-சேலம் இடையில் அமைய உள்ள சாலைக்கு அருகில் 109 மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சட்டவிரோதமாக மரங்களை வெட்டியதாக 5 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் இருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளதாகவும் மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இருவரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மரம் வெட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள 5 பேரின் குற்றப் பின்னணி குறித்து அரூர் டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தர்மபுரி மாவட்ட வனத்துறை அதிகாரிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகளின் இந்த வலுக்கட்டாய நடவடிக்கை குறித்தும், விதிமுறைகளை மீறி செய்து வரும் அட்டூழியங்கள் குறித்தும் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பி வரும் அரசு நிர்வாகம், தற்போது 8 வழிசாலைத்திட்டத்தை மாற்றியமைக்க திட்டட்டு வருவதாகவும், திட்டத்தை இறுதி செய்யும் வரை நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள மாட்டோம் என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.
இதையடுத்து 8 வழிச்சாலை திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில், வனத்துறை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: