திண்டுக்கல் :

பழனியில் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்கு சேர மன்னர்களின் அரிய வகை செப்புக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் பழங்கால நாணய சேகரிப்பாளர் சுகுமார்போஸ் இந்த நாணயத்தை கண்டறிந்து கூறியதாவது, ஒழுங்கற்ற வட்டவடிவிலான இந்த செப்புக்காசுகளின் முன்புறம் கொங்குசேர மன்னர்களின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இடதுகோடியில் வில்லும், அதற்கடுத்து யானையும் மற்றும் அதற்கடுத்து பனைமரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மூன்றும் சேர அரசின் முத்திரைகளாகும். நாணயத்தின் மேற்புரம் மங்கள விளக்கு உள்ளது. ஓரங்களில் 8 வட்ட புள்ளிகள் உள்ளன. நாணயத்தின் பின்புறம் பலிபீடத்தின் குறுக்காக இரண்டு வாள்கள் உள்ளன. இடது மற்றும் வலது ஓரங்களில் மங்கள விளக்குகளும் 9 வட்டப்புள்ளிகளும் உள்ளன. இந்த நாணயம் 3.200 கிராம் எடையுடனும் 1.செ.மீ குறுக்களவும் கொண்டதாக உள்ளது.

சேர நாட்டையும் (தற்போதைய கேரள மாநிலம்) மற்றும் தமிழகத்தின் கொங்கு பகுதிகளையும் ஆண்டு வந்தவர்கள் சேர மன்னர்கள் கொங்கு சேர மன்னர்களாவார்கள். சங்க கால சேரர்களின் வழியிலும் தமிழகத்தின் பாண்டிய, சோழ மன்னர்களின் ரத்த கலப்புகளின் வழியிலும் வந்த கொங்கு சேர மன்னர்களின் நாணயங்கள் அரிதாகவே கிடைக்கின்றன.  தற்போது கிடைத்திருக்கும் இந்த நாணயமும் ஒரு அரிய வகை நாணயமாகவே உள்ளது. கொங்கு சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் யானை உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் கிடைத்திருப்பது அரிய செய்தியாகும்.

பொதுவாக கொங்கு சேர மன்னர்களின் நாணயங்களில் யானை உருவம் பொறித்திருப்பதை பார்ப்பது அரிதாகும். இந்த நாணயம் எந்த மன்னர் காலத்தில் வெளியிடப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது  14ம் நுhற்றாண்டின் முற்பகுதியில் கொடுங்களுரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இரவிவர்ம குலசேகரபெருமாள் காலத்து நாணயமாக இருக்க வாய்ப்புள்ளது. எனினும் இதனை உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: