அரசு மாணவியர் விடுதி என்று கூறப்படும் படுமோசமான இந்த கட்டிடத்தில்தான் தாழ்த்தப்பட்ட ஏழை பெண் பிள்ளைகள் தங்கிப் படிக்கிறார்கள். பட்டியிலிருந்து வெளியே வரும் ஆடுகளை போல  விடுதிகளுக்கு திரும்புகிறார்கள். மன்னார்குடி  பராங்குசம் தெருவில் உள்ள தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின்  மாணவிகளுக்கான இந்த விடுதி ஏதோ  கைவிடப்பட்ட மிகப்பழமையான கட்டிடம் போல தோற்றமளிக்கிறது.   விடுதியின் பின்புறமும் வடப்புறமும் குப்பை மேடுகள் எப்பொதும் உள்ளன.   தீவிர டெங்கு ஒழிப்பு சமயத்தில்கூட இந்த குப்பைக் கோபுரங்கள் குறையவில்லை. பத்து நாட்களாக விடுதியின் ஆழ்குழாய் கிணறு வற்றிப்போய் விடுதி ஊழியர்கள்  தவித்துப்  போயிருக்கிறார்கள். மேலதிகாரிகளிடம் போய் முறையிட்டுள்ளார்கள் . 11.9.2018 வரை  தெருவாசி ஒருவரின் சேவை உள்ளத்தால் அவரது ஆழ்குழாய் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் கொடுக்கப்பட்டு விடுதி இயங்கி வருவதாகவும் விடுதி காப்பாளரும் சரி மற்ற ஊழியர்களும் எவ்வளவுதான் அர்ப்பணிப்போடு வேலை செய்து வந்தாலும்  ,விடுதியின் அவலம் அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்றும் அதிகாரிகளும் அரசும்தான் இதற்கு பொறுப்பு . என்று தெருவாசிகள் கூறுகின்றனர்.   .1980களில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் வெள்ளையை பார்த்தது அப்போதுதானாம். . ஐப்பாசி கார்த்திகை மாத பெருமழை காலங்களில்  மன்னார்குடி பெரிய பெருமாள் கோயில் மேல ராஜவீதியின் தென்புற சாலையில்   பெருக்கெடுக்கும் மழை நீர் தெருக்குப்பைகளையும் வாரிக்கொண்டு வந்து விடுதி காம்பவுண்டை  நிரப்பி விடும். இந்த விடுதியின்  பெண் குழந்தைகள் பள்ளிச்செல்வதற்கும் வருவதற்கும் அப்போது அனுபவிக்கும்  சிரமங்கள் சொல்லி மாளாது. ஆனால் அதே மாணவிகள் மார்கழியில் வண்ணப்பொடிகளால் தங்கள் விடுதியின் வாசற்படியை கோலம் போட்டு அழகுபடுத்துவார்கள் பேத்தியை இந்த விடுதியில் சேர்த்து படிக்க வைக்கும் ஏழை முதியவர்  ஒருவர் நம்மிடம் கூறும்போது  வார்டன் அறையின் தரையே வெடித்து வாய் பிளந்து நிற்கிறது  ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்தும் கொக்கிகள் இல்லா கதவுகளை  கட்டுக்கம்பி,  சில சமயங்களில்  மாணவிகளின் ரிப்பனையும் கட்டி முடிந்து குளிர், கொசு, சாரலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். இந்த விடுதியை பார்வையிட வரும்  அதிகாரிகள் இந்த அவலத்தைப் பார்த்துவிட்டு எப்படித்தான் மனசாட்சியோடு செல்கிறார்கள்.  என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று அந்த பெரியவர் கூறினார்.

மன்னார்குடி மதுக்கூர் சாலையில் உள்ள கல்லூரி மாணவர்களின் ஆதிதிராவிடர் விடுதியும்  இதே லட்சணத்தில்தான் உள்ளது. விடுதி 1991 இல் கட்டப்பட்டது.. விடுதியின் தென்புறம் ஜன்னல் ஷேடுகள் இடிந்து விழுந்தும் சுவற்றில் சிமெண்ட் காரை பெயர்ந்தும் கட்டிடம் பரிதாபமாக காட்சியளிக்கிறது. விடுதியின் நடு முற்றம் குண்டும் குழியுமாய் தரை செங்கற்கள் தெரிய கரடுதட்டி கிடக்கிறது  இந்த விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவரிடம்  மிகமிகத்தோழமையுடன் விசாரித்தோம். அந்த கல்லூரி மாணவர் தனது முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சிரிக்காமல்  பதிலளித்தார்.  அது வேறு  ஒன்றுமில்லை சார்….முன்னொரு நாளில்  ஒரு வார்டன் இருந்தார். மாணவர்கள்  சாப்பிட்ட மிச்ச சொச்சத்தை போட்டு ஒரு நாயை வளர்த்தார். ரொம்ப நன்றியுள்ள நாயாம்  சார் அது. அதுக்கு பசிக்கும்போதெல்லாம்  நடு முற்றத்திற்குவந்து   வாலை ஆட்டிக்கொண்டே தரையை பிராண்டுமாம்.   அப்படி பிராண்டி  பிராண்டிதான் தரை இப்படி ஆகிவிட்டதாம். அந்த நாய் இப்போது இல்லை. ஆனால்  இந்த  கட்டிடத்தைக் கட்டிய கரைவேட்டிக்காரர்  மட்டும் இப்போது ஜோராக  இருக்கார்  என்று சிரிக்காமல் கூறினார்.   ஏதோ மன்னார்குடியில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகள்தான் மட்டும்தான் இப்படி அவலநிலையில் உள்ளது என்பதல்ல. .. 2018-2019 ஆம்ஆண்டிற்கான எடப்பாடி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கொள்கை அறிக்கையின்படி 1143 பள்ளி விடுதிகளும் 143 கல்லூரிவிடுதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன. இதில்  முக்காலே மூணு வீசம் விடுதிகள் இந்த கதியில்தான் உள்ளன  ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள்  எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை அறிய வேண்டுமென்றால் தமிழகத்தின் ஏதேனும் ஐந்து எடுத்துக்காட்டு மாவட்டங்களுக்குச் சென்று தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியரின் விடுதி கட்டிடங்களை  மேலோட்டமாக வெளியிலிருந்து பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்து கள ஆய்வு செய்தாலே  தெரிந்து விடும்.    582 மாணவியர் விடுதிகளுக்கு இன்சினேட்டர்கள் ( நாப்கின் எரிப்பான் ) வழங்கப்பட்டிருக்கிறதாம். நடப்பு ஆண்டின் கொள்கை அறிக்கை கூறுகிறது. பாதி விடுதிகளில் இது ரிப்பேராகி கிடக்கிறது.. தண்ணீர் சுத்திகரி்ப்பான்கள்  பல விடுதிகளில் வாஷிங் இயந்திரங்கள் இவைகளுக்கும் இதே கதிதான்.  இவைகளை பழுது பார்க்க மாற்ற எந்த நிதித்தலைப்பில் எங்கே பணம் இருக்கிறது என ஆதிதிராவிடர் நல மாவட்ட நிர்வாகங்கள் திகைத்து நிற்பதாக தகவல்கள் வருகின்றன. .  எடப்பாடியார் அரசின் 2018-2019 அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்துவதற்காக ரூ.3549.65 கோடி  2018-19 நிதியாண்டிற்கு பட்ஜெட் மதிப்பீடு அளிக்கப்பட்டிருப்பதாக ஜபர்தஸ்தாக கூறுகிறது. அறிக்கைதான் பில்டப் செய்யப்பட்டு ஸ்ட்ராங்காக தெரிகிறதே தவிர  பேஸ்மட்டம் வீக்காக பல்லிளித்தபடி நிற்கிறது. கல்வி உதவித்தொகை அளிப்பதில் பஸ் பாஸ் வழங்குவதில் குளறுபடிகள் தாமதங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடருகின்றன. விடுதி பள்ளி மாணவர்களுக்கான உணவுச் செலவு மற்றும் சில்லரை செலவினத்திற்காக ரூ.900- மற்றும் ரூ.50- உம், கல்லூரி மாணவர்களுக்குரூ1000-உம் ரூ.75- உம்வழங்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது. இந்த தொகைகள் இன்றையவிலைவாசி உயர்வில் அறிவியல் அடிப்படை இல்லாத தோராய தொகைகளாகும்.. இந்த  விடுதிகளில் படிக்கும் குழந்தைகளின் காப்பாளர்கள் பெற்றொர்களில் சிலரை நெருங்கிச்சென்று விசாரித்தபோது  நமது  தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த சேரிப்பிஞ்சுகள் இரவில் கொசுக்கடியொடு தங்கிப்படிக்கும் அவலம் தெரியவந்தது. .  தாழ்த்தப்பட்டோருக்கான மாணவ மாணவியரின் விடுதிகள் மாநிலம் முழுவதும் அவலநிலையில் உள்ளதற்கு எது  காரணம்? நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறையா? ஆய்விற்கு வரும் அதிகாரிகளின் கவனக்குறைவா? ஆட்சியாளர்களின் அலட்சியமா? இம்மூன்றும்தான் காரணம் என்றாலும் இவைகளுக்கு  முழு முதல் காரணம் அரசின் அலட்சியமும் அக்கறையின்மையும்தான். குறிப்பிட்ட இடைவெளி ஆண்டுகளில் இக்கட்டிடங்களை வெள்ளை வர்ணம் அடித்து வெடிப்பு தெறிப்பு சிதிலங்களை ரிப்பேர் செய்ய வேண்டும். இந்த பணிகளுக்கு  தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  அதை அதிகாரிகள் கரைவேட்டிகள்  அபேஸ் செய்துவிடாமல் கண்காணிக்க வேண்டும். இதற்கெல்லாம்  எடப்பாடி அரசிற்குதான்  துப்பில்லையே.  நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சர்க்கஸ் வேலைகளில் எப்போதும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதற்கே  நேரம் சரியாக இருக்கிறது. . கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆன . தமிழ்நாட்டின்  அத்தனை மாணவ மாணவியர் விடுதி கட்டிடங்களும் தரை பெயர்ந்து சுவர் தெறித்து பூச்சு உதிர்ந்து அழுக்காக  காட்சியளிக்கின்றன. இந்தக் கட்டிடங்களுக்கும் விடுதிகளுக்கும் மறுவாழ்வு கிடைக்க வேண்டுமென்றால் எப்போதும் பிஜேபியிடம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துகிடக்கும் எடப்பாடி அரசிடமிருந்து தமிழ்நாடு மீண்டு மறுவாழ்வு பெற வேண்டும்.

-நீடா சுப்பையா

Leave a Reply

You must be logged in to post a comment.