அமெரிக்காவில் தற்போது மழை காலம் தொடங்கியிருக்கிறது. வழக்கமான மழைக்காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புயல் ஏற்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று உருவாக்கியிருக்கிறது. இதற்கு புளோரன்ஸ் புயல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புயல் தாக்குதலால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம் என அமெரிக்க வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.
இதன் காரணமாக வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் விர்ஜீனியா பகுதிகளில் கடலோரம் வசித்துவரும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் கிழக்கு கடலோரப் பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி தாக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் தற்போது ஒரு லட்சத்துக்கும் மேலான வீடுகளில் மின் இணைப்பு சேதமடைந்து, துண்டாகியுள்ளது. நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. உட்புறங்களில் பேரழிவையும் வெள்ளத்தையும் இந்த சூறாவளி உண்டாக்கும் என்று அமெரிக்காவின் மத்திய அவசரகால மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளிக் காற்றால் கிழக்குக் கடலோரப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் 1400க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.