போபால்:
பெட்ரோல் – டீசல் விலை உயர்வால் மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். பல மாநிலங்களில் 90 ரூபாயைத் தாண்டியுள்ள பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை எட்டும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதுமே பெட்ரோல் – டீசல் விலை அதிகம்தான் என்றாலும், பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் மற்ற மாநிலங்களை விடவும் அதிகவிலைக்கு பெட்ரோல் – டீசல் விற்கப்படுவதாக புதிய புகார் எழுந்துள்ளது.இந்த அதிகவிலை காரணமாக, மத்தியப்பிரதேச மாநில மக்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று பெட்ரோல் – டீசல் வாங்கி வருவதாகவும், இதனால் மத்தியப்பிரதேச பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை குறைந்து விட்டதாகவும், அங்குள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்களே கவலை தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.மேலும், விற்பனையை அதிகரிப்பதற்காக- துணிக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூறுவதைப் போல, ‘இத்தனை லிட்டர் பெட்ரோல் – டீசல் வாங்கினால் இந்த இந்தப் பொருட்கள் இலவசம்’ என்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர்.

கனரக வாகனங்களுக்கு 100 லிட்டர் பெட்ரோல் நிரப்பினால், ஓட்டுநருக்கு உணவும், தேநீரும் இலவசமாக வழங்கப்படும்; 5 ஆயிரம் லிட்டர் நிரப்பினால் சைக்கிள் ஒன்று இலவசமாக வழங்கப்படும்; 50 ஆயிரம் லிட்டர் நிரப்பினால் ஏசி அல்லது லேப் டாப் ஒன்று வழங்கப்படும்; 1 லட்சம் லிட்டர் நிரப்பினால் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று பரிசு அறிவித்துள்ளனர்.

ஆனால், பங்க்குகளின் இந்த அறிவிப்புக்கு பலனிருக்காது என்றே பலரும் கூறுகின்றனர். ஏனெனில் பங்க் உரிமையாளர்கள் இருசக்கர வாகனத்தை இலவசமாக தந்து விடுவார்கள்; அதற்கு பெட்ரோல் போட்டால்தானே ஓட்ட முடியும்; கொள்ளை விலையில் விற்கும் பெட்ரோல் காரணமாக, இருக்கும் வாகனத்தையே விற்றுவிடலாம் என்று நினைக்கும்போது, புதிய வாகனத்தை வாங்கி என்ன செய்வது? என்றும் அவர்கள் கேட்கின்றனர்.பெட்ரோல் வாங்கினால் பைக் இலவசம் என்று அறிவிக்கும் அளவிற்கு ஒரு மோசமான பொருளாதார நிலைக்கு பிரதமர் மோடி நாட்டை கொண்டுவந்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: