புதுதில்லி;
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 2018-ஆம் ஆண்டின் துவக்கத்தில் டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 63 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த 8 மாதங்களில் மட்டும் 10 ரூபாய் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று 71 ரூபாய் 69 காசுகளாக இருந்த ரூபாய் மதிப்பு, புதன்கிழமையன்று ஒரேநாளில் 1 ரூபாய் 22 காசுகள் வீழ்ச்சியடைந்து 72 ரூபாய் 91 காசுகளாக இறங்கியுள்ளது.
இதனால், வர்த்தக துவக்கத்தில் சென்செக்ஸ்ஸூம் 400 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.புதன்கிழமையன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 1.34 சதவிகிதம் குறைந்து, அதாவது 509 புள்ளிகள் சரிந்து 37,413.13 ஆக காணப்பட்டது. நிப்டி 1.32 சதவிகிதம் அதாவது 150.60 புள்ளிகள் சரிந்து 11,287.50 புள்ளிகளாக இருந்தது. பின்னர் அது சற்று மீண்டது.

இதனிடையே, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது, சமன் இல்லாத உலகப் பொருளாதாரம், சீதோஷண நிலை மாற்றம் ஆகியவையே இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதுமட்டுமன்றி, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 75 ரூபாய் வரை வீழ்ச்சி அடையலாம் என்றும் பீதியூட்டியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.