புதுதில்லி;
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார்; அவர் அமைச்சரவையைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, 126 ரபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. பின்னர் வந்த மோடி அரசு, 36 விமானங்களை மட்டும் வாங்குவதற்கு மட்டும் முடிவு செய்தது.
மேலும், அந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்தையும் திடீரென இணைத்தது. முன்பு ஒரு விமானம் 526 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மோடி அரசோ அதனை 1670 கோடி ரூபாயாக உயர்த்தியும் அதிர்ச்சியளித்தது.இதனால் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவுக்கு கூடுதல் செலவாகும் என்பதுடன், இந்த ஒப்பந்தத்தால் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனம் மட்டுமே லாபம் அடையும் என்று புகார்கள் கிளம்பின. இன்னும் சொன்னால், அனில் அம்பானி கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காகவே ஒப்பந்தத்தை மாற்றி அமைத்துள்ளனர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால், மோடி அரசு இப்போதுவரை ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து வெளிப்படையான விளக்கம் எதையும் அளிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று மட்டுமே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறது.ஆனால், ரபேல் ரக விமானக் கொள்முதலில் மோடி அரசு மிகப்பெரிய ஊழல் செய்திருப்பது உண்மைதான், என்று சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில்தான், ரபேல் ரக போர் விமான கொள்முதல் ஒப்பந்தமானது, அமைச்சரவைக்கே தெரியாமல் பிரதமர் மோடி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று பாஜக மூத்த தலைவர்களும், மத்திய முன்னாள் அமைச்சர்களுமான யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசியிருக்கும் அவர்கள், “நாட்டின் பாதுகாப்புக்கு 126 விமானங்கள் தேவை என்று ‘பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில்’ தெரிவித்திருந்தது; ஆனால், மோடி அரசு 30 விமானங்களை வாங்குவதற்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

“ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கென பல விதிமுறைகள் உள்ள நிலையில், அவை அனைத்தையும் பிரதமர் மோடி மீறி இருக்கிறார்” என்று கூறியிருக்கும் முன்னாள் அமைச்சர்கள், “ ஒரு ரபேல் ரக போர் விமானத்தின் விலை ரூ. 526 கோடி என்ற நிலையில், அதனை ரூ. 1670 கோடியாக மாற்றும் தன்னிச்சையான முடிவையும் மோடியே எடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “தனது ஆதரவு தொழிலதிபர்களுக்காக ஒப்பந்ததையே மோடி மாற்றியுள்ளார்” என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.