போபால்;
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவிகள் அணிந்திருந்த கறுப்பு நிற துப்பட்டாக்களை, அம்மாநில காவல்துறையினர் பறித்துச் சென்றது கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலம் பெடுல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். முல்டாய் நகரில் உள்ள மகாத்மா காந்தி சித்ரகூட் கிராமோதயா விஷ்வ வித்யாலயாவை சேர்ந்த கல்லூரி மாணவிகளும் சீருடையுடன் விழாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகளின் சீருடையில் இடம்பெற்றிருந்த துப்பட்டா கறுப்பு நிறத்திலானது ஆகும். ஆனால், மாணவிகள் அந்த கறுப்பு நிற துப்பட்டாக்களை கறுப்புக் கொடியாக பயன்படுத்தி முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களோ? என்று அச்சமடைந்த காவல்துறை, மாணவிகளை விரட்டி விரட்டி, அவர்களின் கறுப்பு நிறத் துப்பட்டாக்களை பறித்து அராஜகம் செய்துள்ளனர்.
சவுகான் வருகைக்கு எதிர்க்கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஏற்கெனவே கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையிலேயே, ‘அரண்டவர்களுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதைப் போல மாணவிகளின் கறுப்புத் துப்பட்டாக்களை காவல்துறையினர் பறித்துள்ளனர்.

இதனால் சவுகான் நிகழ்ச்சி முடியும் வரை, மாணவிகள் மேலாக்கு இல்லாமல் அவமானத்தில் கூனிக் குறுகியபடியே நின்று ஒரு சித்ரவதையை அனுபவித்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்தும்கூட துப்பட்டாக்களை காவல்துறையினர் தராமல் இருந்துள்ளனர். இது தற்போது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதுபோன்ற கொடுமை மத்தியப்பிரதேசத்தில் நடந்தது இல்லை என்றும், மேலும் இதன்மூலம் எதிர்ப்புக்களைக் கண்டு சிவராஜ் சிங் சவுகான் அஞ்சி நடுங்கிக் கிடக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது என்றும் மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சுக்தேவ் பான்சே கூறியுள்ளார்.துப்பட்டா பறிப்புக்கு உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ. சந்திரசேகர் தேஷ்முக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.