புதுதில்லி;
கடன் மோசடிப் பேர்வழிகளின் பட்டியலை முன்கூட்டியே பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்ததாகவும், ஆனால், மோடி அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் ரகுராம் ராஜன் மேலும் கூறியிருப்பதாவது:
“அரசுப் பொதுத்துறை வங்கிகளில் முறைகேட்டின் அளவு அதிகரித்துள்ளது. அதிக நம்பிக்கை கொண்ட வங்கியாளர்கள், அரசாங்கம், தாமத வளர்ச்சி போன்றவைதான் வராக்கடன் அதிகரிப்புக்குக் காரணம்.மேலும், நான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது, முறைகேடுகளைக் கண்காணிக்க தனி மையம் அமைக்கப்பட்டது. விசாரணை முகமைகளுக்கு முன்பாகவே, முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஏற்பாடாக இந்த மையம் அமைக்கப்பட்டது.

அதிக முறைகேடுகளில் ஈடுபட்டிருப்போர் கொண்ட பட்டியல் ஒன்றும் பிரதமர் மோடி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன்மீது எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டதாக நான் அறியவில்லை. அதிக மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மீதுகூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை”.இவ்வாறு ரகுராம் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை விட்டு வெளியேறும்போது, வராக்கடன் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரம் கோடியாக இருந்தது. அது மோடியின் நான்காண்டு ஆட்சிக்காலத்தில் ரூ. 10 லட்சம் கோடியாக அதிகரிக்கிறது என்றால், மோசடி பேர்வழிகளை மோடி அரசு கண்டுகொள்ளாததே அதற்குக் காரணம் என்பதுதான் ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.