தீக்கதிர்

160 முஸ்லிம்கள் தே.பா. சட்டத்தில் கைது? உ.பி. மாநில மக்களை மதரீதியாக துண்டாடும் ஆதித்யநாத் அரசு…!

லக்னோ; 
உத்தரப்பிரதேச பாஜக அரசு, மக்களை மதரீதியாக துண்டாடி, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய மிகப்பெரிய சதித்திட்டத்தை தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனொரு பகுதியாகவே, உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களை ஒடுக்கும் விதமாக, ஒரே ஆண்டில் 160 பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.முசாபர் நகர் வன்முறையின் மூலம், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும், அடுத்து வந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிபெற்ற உதாரணம் இருப்பதால், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே திட்டத்தை கையிலெடுக்க பாஜக முடிவு செய்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், சாமியாரான ஆதித்யநாத் முதல்வரானது முதலே முஸ்லிம்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்தன. மாட்டிறைச்சித் தடை துவங்கி மதரஸாக்களை கண்காணிப்புக்கு உள்ளாக்கியது என தொடர்ந்த நடைமுறை, பொய் வழக்கு, போலி என்கவுண்ட்டர் அளவிற்கு மோசமாக மாறியது. 1200 என்கவுண்ட்டர் சம்பவங்கள் அரங்கேறின.

சாலையில் நமாஸ் செய்யும்போது, காவல்நிலையத்தில் கோகுலாஷ்டமி கொண்டாடுவதில் என்ன தவறு? என்று- முதல்வர் என்பதையும் மறந்துவிட்டு ஆதித்யநாத் விஷம் கக்கினார்.
அதற்கேற்பவே மத வன்முறைகளில் உத்தரப்பிரதேசம்தான் தற்போது முதலிடம் வகித்து வருகிறது. கடந்த 2017-இல் மட்டும் 44 பேர் மதவன்முறையில் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 540 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாரென்றால் முஸ்லிம்கள்தான்.

புலந்த்சாஹர் மற்றும் சஹரான்பூரில் மதவன்முறையை அரங்கேற்றியது, ஆதித்யநாத் தலைமையிலான இந்து யுவ வாஹினி அமைப்பு. கடந்த 2017 அக்டோபர் 1-ஆம் தேதி மொகரம் பண்டிகையின் போது, உத்தரப்பிரதேசத்தின் 9 மாவட்டங்களில், இந்து யுவ வாஹினி, இந்து சமாஜ் கட்சி, அகில பாரத இந்து மகாசபை ஆகிய அமைப்புக்கள் ஆங்காங்கே வன்முறையை நடத்தின. ஆனால், இவற்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் அப்பாவி முஸ்லிம்கள்தான்.

இந்நிலையில்தான், மதவெறுப்பு பிரச்சாரத்தையும், முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறையையும் மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்து, கடந்த ஓராண்டில் மட்டும் 160 முஸ்லிம்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை பாய்ச்சியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் சாதாரண வழக்குகளில் முஸ்லிம்களை கைது செய்வதும், அவர்கள் செஷன்ஸ் நீதிமன்றங்களில் ஜாமீன் பெற்று வந்தால், உடனடியாக அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு போடுவதுமாக ஆதித்யநாத் அரசு இந்த அடக்குமுறையை தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அடக்குமுறைச் சட்டங்களில், முஸ்லிம்களை கைது செய்து, அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதும், அதன்மூலம் பெரும்பான்மை இந்துக்களின் பாதுகாவலன் தான்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும்தான் பாஜக-வின் திட்டம் ஆகும்.
அந்த வகையில், 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது, இன்னும் அதிகளவிலான மதவன்முறைகளும் அதையொட்டி முஸ்லிம்கள் மீதான பழிவாங்கலும் அதிகரிக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.