திருப்பூர்,
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் மோசடி செய்த ஊராட்சி செயலாளர் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரி செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம் புதூர் ஊராட்சியில் கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சுமார் 300 தொழிலாளர்கள் அடையாள அட்டை பெற்று வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017 ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், 2017 அக். 12 முதல்18 ஆம் தேதி வரை வேலை செய்ததற்கு கூடுதலான கூலி பெற்றுள்ளதால் அதனை உடனடியாக திரும்ப செலுத்த வேண்டும். இல்லையென்றால் எந்த தொழிலாளர்களுக்கும் வேலை கொடுக்க முடியாது என ஊராட்சி செயலாளரான எப்சிபா கூறியதாக தெரிகிறது.  இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும். தொழிலாளர்களின் கூலி தொகையை கையாடல் செய்ய நினைக்கும் ஊராட்சி செயலர் மீது மாவட்ட ஆட்சியர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.பி.பழனிசாமி தலைமையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் சிபிஐ மாவட்டச் செயலாளர் ரவி, காங்கயம் ஒன்றியச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தபின் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: