மனிதகுலத்தைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் உலக முதலாளித்துவத்திற்கு இல்லை.

அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தி சக்திகள் பெருமளவு வளர்ச்சி கண்டிருப்பதால் முதலாளித்துவ நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இந்த வளர்ச்சியினால் வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை என்பதோடு வருமானம் மற்றும் செல்வத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு அதிகரித்துள்ளன. மிக அதிகமான விகிதத்தில் உபரி மதிப்பு உறிஞ்சப்படுவதால் தொழிலாளர்களைச் சுரண்டுவது தீவிரமாகியுள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வருமானத்தையும், செல்வத்தையும் ஒரு சில தனிநபர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் குவிப்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. ஏகாதிபத்தியம் சூறையாடலையும், சீர்குலைவையும் தன்னகத்தே கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் லட்சக்கணக்கான மக்கள் பலியாவதற்குக் காரணமாக அமைந்த காட்டுமிராண்டித்தனமான இரண்டு உலகப் போர்களில் மனிதகுலத்தை ஏகாதிபத்தியம் இறக்கிவிட்டது. ஒட்டுமொத்த பொருளாதார தேவைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஆயுத தயாரிப்பு தொழில், வளர்ச்சியடைந்த முதலாளித்துவ பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத பகுதியாக ஆக்கப்பட்டள்ளது. அரசு பின்வாங்கி விலகி நிற்கவேண்டும் என்ற நவீன தாராளமய முன்மொழிவுகள் உழைக்கும் வர்க்கம் மற்றும் சாமானிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டப் பலன்கள் ஈவிரக்கமின்றி வெட்டப்படுதலுக்கு இட்டுச் சென்றுள்ளன,

வேலைவாய்ப்பைப் பெருக்காத வளர்ச்சி, நிரந்தரமற்ற வேலை, வருமானத்திலும், செல்வத்திலும் சமச்சீரற்ற நிலை போன்றவைதான் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். நிலையற்ற நிதி அமைப்பு, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் தேக்கம் அல்லது குறைவான வளர்ச்சி வீதம், செல்வாதாரங்களை வீணடிப்பது அல்லது முறையற்ற வகையில் பயன்படுத்துவது போன்றவை முதலாளித்துவ அமைப்புக்குள் இருந்து வரும் நெருக்கடியின் அடையாளங்கள் ஆகும். லாபவெறி உந்தித் தள்ள பன்னாட்டு நிறுவனங்கள் எடுக்கும் மூர்க்கத்தனமான முயற்சிகள், பணக்கார நாடுகளின் படாடோபமான நுகர்வு முறை போன்றவற்றால் சுற்றுப்புறச்சூழல் பாழடிக்கப்பட்டு, பொதுவாக உலகின் உயிர்வாழ் சூழலுக்கும் குறிப்பாக மூன்றாவது உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அடிப்படை முரண்பாடான, வளர்ந்து கொண்டேயிருக்கும் உற்பத்தி சமூகமயமாக்கலுக்கும், உபரி மேன்மேலும் தனியார் சொத்தாக மாறுவதற்கும் இடையிலான முரண்பாடு மேலும் தீவிரமாக இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.