திருப்பூர்,
பி ஆண்டிபாளையம் கிராமத்தில் மூன்று மாதங்களாக நீடித்து வரும் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வுகாண கோரி அந்த கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பி ஆண்டிபாளையம் கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்குழாய் மூலம் இம்மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் அங்கு கடந்த ஓராண்டு காலமாக போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஆழ்குழாய் மூலமும் நீர் கிடைக்கவில்லை. எனவே, இப்பகுதி மக்கள் விலை கொடுத்து குடிநீரை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். ஆகவே, குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலரிடம் மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் ஆழ்குழாயில் நீர்வற்றி விட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஊராட்சி செயலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்பிரச்சனை தொடர்பாக அரசு அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்ல ஆண்டிபாளையம் மக்கள் தீர்மானித்தனர். இதன்படி செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி ஆண்டிபாளையம் கிளைச் செயலாளர் முருகேசன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள்உள்பட சுமார் 70 பேர் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குவந்தனர். அங்கு ஒன்றிய ஆணையர் இல்லாத நிலையில் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருந்தனர்.

அதன் பிறகு ஒன்றிய ஆணையர் அங்கு வந்தவுடன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பவித்ராதேவி, கிளைச் செயலாளர் முருகேசன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் ஆழ்குழாயில் தண்ணீர் இல்லாததால் இப்பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக ஊராட்சி செயலர் கூறியதாக மக்கள் தெரிவித்தனர். ஒன்றிய ஆணையர் உடனடியாக ஊராட்சி செயலரைத் தொடர்புகொண்டு இந்த விபரம் குறித்து விசாரித்தார். அப்போது, ஆண்டிபாளையம் ஆழ்குழாயில் நீர் இருக்கிறது. ஆனால் நீரேற்றும் மோட்டார் பம்பு பழுதாகி இருப்பதால் நீரேற்றம் செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. இப்பிரச்சனை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், புதன்கிழமைக்குள் ஆழ்குழாய் மோட்டாரை சரி செய்து பி ஆண்டிபாளையம் கிராம மக்களுக்கு குடிநீர்கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய ஆணையர் உறுதியளித்தார்.

இதை ஏற்றுக் கொண்ட மக்கள்,குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் பி ஆண்டிபாளையத்துக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் வலியுறுத்தினர். ஆணையர் வாக்குறுதி அளித்தபடி ஆழ்குழாய் மோட்டார் பழுதுநீக்கி குடிநீர் விநியோகம் செய்யாவிட்டால் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போவதாகவும் இம்மக்கள் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.