சென்னை,
செப்டம்பர 11 என்றால் மகாகவி பாரதியின் நினைவுநாள் என்று 96 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலிருந்து தமிழக அரசால் மாற்றப்பட்டிருக்கிறது. பாரதியின் 97 ஆவது நினைவு நாளிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் சார்பாக அவரது சிலைக்கு வணக்கம் செலுத்த மாநில துணைத் தலைவர் இரா.தெ.முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் இயக்குநர் ஏகாதசி, தென்தென்னை மாவட்டக் குழு உறுப்பினர் மதுரை பாலன், திரைப்பட எழுத்தாளர் பொன் பிரகாஷ் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரைக்கு செவ்வாயன்று (செப். 11)  சென்றனர். அங்கு நினைவு நாளிற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, சென்னை பாரதி இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்த வந்தனர். அங்கேயும் எந்த ஏற்பாடும் இல்லை.  பிறகு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் பாரதி இல்ல பொறுப்பாளரிடம் கேட்டதற்கு நாளைக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார்.

ஏன் செப்டம்பர் 11 தானே நினைவு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று தமுஎகச தலைவர்கள் கேட்டனர். அதற்கு, அரசு ஆய்வு செய்தபடி இந்தாண்டு முதல் செப்டம்பர் 12 ஆம் நாள்தான் பாரதி நினைவுநாளாக கடைப்பிடிக்க அரசு ஆணை வெளியிட்டிருக்கிறது. இது அரசு சம்பந்தப்பட்டது. நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை என செய்தி தொடர்புத்துறை பொறுப்பாளர் பதில் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தமுஎகச தலைவர்கள், செப்டம்பர் 11 நள்ளிரவு முடிந்து, கடிகார சுழற்சிபடி அதிகாலை 1.20 மணிக்கு பாரதி இறந்தார் என அறிவோம். இது வரை கடைப்பிடிக்கப்பட்ட பழக்கத்தை மாற்ற முடிவு செய்த அரசு, கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டிருக்க வேண் டும். எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான மாநில அரசு, பொதுக் கருத்துகளை கேட்பதில் பண்பாட்டு அமைப்புகளை சந்திப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.