===பேராசிரியர் கே. ராஜு===                                                                                                                                                அறிவைச் சேக ரிப்பது முன்போல் இன்று சிலரின் ஏகபோக சொத்து அல்ல. அறிவைச் சேகரிப்பதும் அதைப் பரவச் செய்வதும் இன்றைய நவீன சமுதாயங்களின் அடிப்படையாக மாறியிருக்கிறது. பல்வேறு வித்தியாசமான மக்களையும் பண்பாடுகளையும் புரிந்து கொண்டு அந்த அடிப்படையை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

கடந்த காலத்தில், அறிவைச் சேகரித்து, பாதுகாத்து, வளர்த்து, மற்றவர்களுக்குத் தருபவர்களுக்கு சில கடுமையான நெறிமுறைகள் இருந்தன. கல்வியில் சிறந்த அந்த மேன்மக்கள் தங்களுக்காக மட்டுமே பேசினர்,தங்களுக்காகவே எழுதினர், தங்களுக்குச் சொந்தமான அறிவை கவனமாகப் பாதுகாத்தனர், அது பொதுமக்களுக்குக் கசிந்துவிடாமல் பார்த்துக் கொண்டனர். அது மட்டுமல்ல, தங்களது வட்டத்திற்கு வெளியே இருந்த யாராவது அந்த அறிவைப் பெற முயற்சித்தால் அவர் களைத் தண்டிக்கவும் செய்தனர். ஏகலைவன், சம்புகன்கதைகள் அந்த சரித்திரத்தை நம் முன்னே விண்டு வைக்கின்றன. அறிவு பரவலாக்கப்பட்டிருக்கும் இன்றிருக்கும் உலகில் எத்தகையை நற்குணங்களை நாம் வளர்த்தெடுக்க வேண்டும், எத்தகைய தீமைகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கேள்வி முக்கியமானது. இதில் பல இருந்தாலும் முக்கியமான ஒன்றின்மீது மட்டும் கவனம் குவிக்க விரும்புகிறேன். அதுதான் அறிவுத்தளத்தில் திறந்த மனதுடன் இருப்பது. அது சிறு வயதிலேயே நமக்குள் விதைக்கப்பட வேண்டும். கற்றலில் அது பிரிக்க முடியாத பகுதியாக இருக்க வேண்டும். எந்தக் காலம் வரை நாம் அறிவார்ந்த தளத்தில் இயங்குகிறோமோ அது வரை நம்முள் அது ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும்.

திறந்த மனதுடன் இருப்பது என்றால் என்ன? அதில் மூன்று கூறுகள் இருக்கின்றன. இந்தியப் பொருளாதாரம் 10 சதம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது என்று ஒரு செய்தித்தாள் குறிப்பிடுகிறது என வைத்துக் கொள் வோம். இந்த கூற்றுக்கு ஆதரவாகவும் எதிராகவும் உள்ள
தகவல்களை, விவரங்களைத் தேடி ஆராய்ந்து பார்த்து அது உண்மைதானா என சோதித்த பிறகே அதுபற்றி நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ஆழமாக ஆராயாமல் எதையும் உடனடியாக ஏற்காமலிருப்பது திறந்த மனதுடன் இருப்பதன் ஒரு முக்கியமான அம்சம்.நாம் ஆழமாக நம்பும் ஒரு விஷயத்தை சற்றே தள்ளி வைத்துவிட்டு, பிறர் சொல்வதைக் காது கொடுத்துக்கேட்பதென்பது திறந்த மனதோடு இருப்பதன் இரண்டா
வது அம்சம். பூமி சூடேறிக் கொண்டிருக்கிறது என்ற வாதம் அடிப்படையற்றது என்றும் அதன் ஆபத்தைச் சுட்டிக்காண்பிப்பவர்கள் விஷமத்தனமாக மிகைப்படுத்துகிறார்கள் என்றும் நாம் ஆழமாக நம்புவதாக வைத்துக்கொள்வோம். நமது நம்பிக்கைக்கு எதிராக (இன்றைய
பூமியின் வெப்பநிலை மனிதர்களால் வரவழைக்கப் பட்டது.புதைபடிவ எரிபொருட்களின் காரணமாக கார்பன் வெளியீடுகள், காடுகள் அழிக்கப்பட்டது போன்ற) வலுவான சான்றுகள் வைக்கப்படும்போதும் அவற்றை நிராகரித்து ஒருவித முரட்டுப் பிடிவாதத்துடன் நம்முடைய நம்பிக்கையைக் கைவிட மறுத்தோமானால் அது நாம் மனதை இறுக மூடிவைத்துக் கொள்வதற்கான அடையாளம். ஒரு பிரச்சனையின் இரு தரப்பு வாதங்களையும் அல்லது அதற்கும் மேல் மூன்றாவது, நான்காவது தரப்பு வாதங்கள் இருப்பின் அவற்றையும் கேட்பது திறந்த மனதின் அடிப்படை. இத்தனை காலம் நாம் நம்பிக்கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு எதிரான சான்றுகள் முன்வைக்கப்படும்போது அவற்றைப் பரிசீலித்து நம் கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பதற்கு ஒரு மனோதைரியம் வேண்டும்.

நாம் வழக்கமாக உலகைப் பார்த்துப் பழகியிருக்கும் பார்வையைத் தாண்டி பிற அம்சங்களைக் கவனிக்கும் குணம் திறந்த மனதின் மூன்றாவது அம்சம்.படிப்பது,கேட்பது, பார்ப்பது, புரிந்து கொள்வது ஆகியவற்றில் நாம் வழக்கமான ஒரு முறையில் பழகி அது ஒரு குறிப்பிட்ட அறிவுச் சட்டகத்தில் அடைக்கப்பட்டு அதுவே நமது இயற்கையான உலகப் பார்வையாக மாறியிருக்கும். இந்த பார்வை என்பது நாமாக முடிவிற்கு வந்ததாக மட்டுமல்ல, நமது நெருங்கியவர்களுடனும் நண்பர்களுடனும் விவாதித்து அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகக் கூட இருக்கலாம். அதைத் தாண்டி யோசிப்பதோ, படிப்பதோ, எழுதுவதோ நமக்கு இயலாததாக மாறியிருக்கக் கூடும். உதாரணமாக, “ஒரு மனிதர் பணம் படைத்தவராக இருப்பதோ, வறுமையில் உழல்பவராக இருப்பதோ அவராக ஏற்படுத்திக் கொண்ட செயல்களின் விளைவுதான். அல்லது அவர் முற்பிறவியில் செய்த வினைகளின் விளைவுதான். அவர் தலையில் எழுதப்பட்டதை யாரால் மாற்ற முடியும்?

தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று ஒருவரது வாழ்நிலைக்கு சமாதானம் சொல்லிவிட்டு ஒரு சிலரால் எளிதில் அதைக் கடந்து செல்ல முடிகிறது. அவர்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவுச் சட்டகம் ஒரு குறிப்பிட்ட பண்பாடு, தத்துவம், மதம், அல்லது சாதியினால் பொதுவாக வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது அவர்கள் சார்ந்திருக்கிற ஒரு குழுவின் தீர்க்கமான முடிவாகவும் இருக்கலாம். யதார்த்த உலகில் ஒரு குழு மற்றொரு குழுவினர் மீது திட்டமிட்டு செய்து வரும் தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன என்ற கருத்திற்கு இந்த சட்டகத்தில் சற்றும் இடம் இருக்காது.இப்படி மனதை இறுக்க மூடிக்கொள்வது திறந்த மனது டன் இருப்பதற்கு முற்றிலும் எதிரானது.
இந்த அடிப்படையில் நாம் சிந்தித்துப் பழகியிருக்கிறோமா என்பதை பரிசீலித்துப் பார்த்து தேவையெனில் நம்மை மாற்றிக் கொள்வது அறிவியலையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்த பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. திறந்த மனதுடன் இருப்பதுதான் அவற்றின் அடிப்படையே.

(உதவிய கட்டுரை : 2018 ஆகஸ்ட் 19 தேதியிட்ட ஆங்கில இந்துவின் காலம்விட்த் பக்கத்தில் பேராசிரியர் ராஜீவ் பார்கவா எழுதிய கட்டுரை)

Leave A Reply

%d bloggers like this: