தீக்கதிர்

திருப்பூரில் வேன் மோதி பள்ளி மாணவி பலி

திருப்பூர்,
திருப்பூர் அவிநாசி சாலை, குமார் நகரில் தனியார் மினி டூரிஸ்ட் வாகனம் மோதியதில் 12 வயது மாணவி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அவிநாசி சாலை, குமார் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி, நித்யா தம்பதியினரின் மகள் கார்னிகா. இவர் அம்மாபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் திங்களன்று இரவுகருப்புசாமி, மகள் கார்னிகாவுடன் திருப்பூர் அவிநாசி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி அங்குள்ள சாலை தடுப்பில் மோதியுள்ளார். இதில் வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த கார்னிகா சாலையில் விழுந்துள்ளார். அச்சமயம் அந்த சாலையில் வேகமாக வந்த தனியார் மினி டூரிஸ்ட் வேன் ஒன்று கார்னிகா மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வேனை ஒட்டி வந்த ஜானகிராமன் என்பவரை பிடித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவரிடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருவதுடன், வேனையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கார்னிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.