தாராபுரம்,
தாராபுரம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியடைந்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த அலங்கியம் அருகே உள்ள கொங்கூர் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து இக்கிராமத்திற்கு மின் விநியோகம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விட்டு, விட்டு மின் விநியோகம் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, விவசாய பணிகளுக்காக இரவு பகலாக கண்விழித்து விவசாயிகள் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி வரும் நிலையில், மின் விநியோகம் இல்லாததால் தண்ணீர் இருந்தும் பயிர்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து 3 நாட்களுக்கு மேலாகியும் தற்போதுவரை நிலைமை சீராகவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோல் தாராபுரம் நகர் பகுதியில் மின் விநியோகம் அவ்வப்போது துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேநேரம், தாராபுரம் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இப்பிரச்சினைக்கு காரணம் என மின்வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே, இப்பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்து தடையற்ற மின்விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.