===து.ராஜா எம்.பி.===                                                                                    இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலை பெற்ற பின்னரும், தலித் மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி முழுமையாக வெற்றி பெறாத பல்வேறு இயக்கங்கள் நடந்துள்ளன. அந்த இயக்கங்களின் போது, இந்தியாவின் சாதியக் கட்டமைப்பு என்கிற கருத்தை பொருத்தமான முறையில் வெளிப்படுத்தும் விதத்தில் பல்வேறு பதங்கள் பயன்படுத்தப்பட்டன. சாதிய கட்டமைப்பு என்பது, ‘‘மேலே செல்லச் செல்ல மரியாதைகூடிக் கொண்டே செல்வதும் கீழே செல்லச் செல்ல இழிவு கூடிக் கொண்டே செல்வதுமான அமைப்பு முறை’’ என்று அம்பேத்கர் விளக்கினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கீழே செல்ல செல்ல மிகக் கொடூரமான வடிவங்களை எடுக்கிற சாதியக் கட்டமைப்பை நாம் பார்த்துக்  கொண்டிருக்கிறோம். மிக மோசமான வடிவத்திலான தீண்டாமைக் கொடுமைகளை அது அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.

பல்லாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த வார்த்தைப் பிரயோகங்கள்
சாதியக் கட்டமைப்புக்கெதிராகவும் தீண்டாமைக் கொடுமைக்கெதிராகவும் சமூக சீர்திருத்தவாதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு இயக்கங்களை உருவாக்கினர். இந்த இயக்கங்களின் போது ஒடுக்கப்பட்ட மக்களை குறிப்பிடுவதற்காக அந்த்யஜர்கள், உரிமை மறுக்கப்பட்ட சாதிகள், பரியாக்கள், ஒடுக்கப்பட்ட சாதிகள், தலித்கள், ஹரிஜனங்கள், ஆதிசூத்திரர்கள், ஆதி திராவிடர்கள் என்ற பதங்களை பயன்படுத்தினர்.

அண்ணல் ஜோதிபா பூலே, தலித் என்ற வார்த்தையை புக்கத்திற்கு கொண்டுவந்த பெருமைக்குரியவர். மகாத்மா காந்தியும் தலித் என்ற வார்த்தையை ஏற்றுக்கொண்டார். 1927இல் “தற்போது முதல் அந்த்யஜர்களையும் நாம் தலித் என்றே குறிப்பிடலாம்” என்று எழுதினார். தலித் என்ற வார்த்தையை முதன்முதலில் சுவாமி சிரத்தானந்தா பயன்படுத்தினார் எனக்குறிப்பிடுகிற காந்தி, “இந்த வார்த்தைக்கான அதே பொருள் கொண்ட வார்த்தையை சுவாமி விவேகானந்தர் தேர்வு செய்தார். தீண்டாமைக் கொடுமைக்குள்ளாகும் மக்களை அவர் உரிமை மறுக்கப்பட்டவர்கள் என்று அழைக்கவில்லை; மாறாக ஒடுக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார். இது மிகவும் சரியானது. அவர்கள் இன்றைக்கு இந்த நிலையில் தொடர்ந்து நீடித்து இருப்பதற்கான காரணம் என்னவென்றால், அவர்கள் சமூகத்தில் உயர் வகுப்பினர் என்று சொல்லக்கூடியவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால்தான்” என்று காந்தி விவரிக்கிறார்.

வேறு பொருத்தமான வார்த்தை இல்லை                                                                                                                                1931இல், தலித் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காந்தி மற்றொரு கட்டுரையில் எழுதினார்: “இதற்கு முன்பு அந்த்யஜர்கள் என்ற வார்த்தையைக் குறிப்பிட்டபோது அது அவர்களை அவமதிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தவில்லை. தேட், பங்கி போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே தலித் என்ற வார்த்தையை மறைந்த சுவாமி சிரத்தானந்தா அவர்கள் முதன் முதலாக பயன்படுத்தியிருந்தார். அந்த வார்த்தை பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். இப்போது அதுவும் விரும்பப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு உண்மையான விளக்கம் என்னவென்றால் நமது சமூகத்தில் தீண்டாமை எனும் விஷம் நீடித்துக் கொண்டிருக்கும் வரை, அந்தக் கொடுமையால் பாதிக்கப்படுகிற மக்களை குறிப்பிடுவதற்கான எந்தப் பெயரை வைத்தாலும் சில காலம் கழித்து அது விரும்பப்படாததாக மாறக்கூடும்.

எனவே இதற்கு சரியான தீர்வு என்னவென்றால் அந்த விஷத்தை முற்றாக அகற்றுவதே ஆகும். எனவே இந்தக் கொடுமையின் அடிப்படை அம்சத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டிய தேவை இருக்கிறது; எனினும், அந்த்யஜா அல்லது தலித் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக பொருத்தமான சிறந்த வார்த்தை ஏதேனும் எவரேனும் கண்டறிந்தால் அதை எனக்கு அனுப்புங்கள்.”

எனவே இன்னும் பொருத்தமான ஒரு வார்த்தை இல்லாத நிலையில், தற்போது வரை தலித் மக்களின் நீதிக்காக போராடும் இயக்கங்கள், தலித் என்ற வார்த்தையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

ஹரிஜன் என்பது தவறானது
தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவரை குறிப்பிடுவதற்காக ஹரிஜன் என்ற வார்த்தையை சிலர் பயன்படுத்துகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. அந்த வார்த்தையை பயன்படுத்துபவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை காந்தி இந்த வார்த்தையை பயன்படுத்தித்தானே அழைத்தார் என்று சமாதானம் பேசுகிறார்கள். அந்த வார்த்தை விடுதலை போராட்டக் காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் அம்பேத்கர் உள்பட பலர், இந்த வார்த்தை, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்றும் அவர்கள் மீது கழிவிரக்கம் கொள்வதாக இருக்கிறது என்றும் கருதினார்கள். 1946இல் இது தொடர்பாக காந்திக்கு புகார்க் கடிதம் வந்தது. கடிதத்தை எழுதியவர், “ஹரிஜன் என்று அழைப்பது, புனிதமானவர்கள் என்று பொருள் கொள்ளும் விதத்தில் முன்வைக்கப்பட்டாலும், அப்படி அழைக்கப்படுகிற மக்களின் மனதில் ஒருவித தாழ்வு மனப்பான்மையைத் திணிப்பதாக இருக்கிறது என நினைக்கிறேன்; அவர்களது உளவியல் கண்ணோட்டத்திலிருந்து இதைப் பார்க்க வேண்டும்.

அவர்கள் எந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்தாலும் கூட, அவர்கள் எப்போதுமே ஹரிஜன் என்று அழைக்கப்படுவதால் தாழ்வு மனப்பான்மை உணர்வை அவர்களிடமிருந்து அழிக்கவே முடியாத அளவிற்கு கடினமானதாக மாற்றும்; தெருக்களில் எவர் ஒருவரும் ஒரு ஹரிஜனைப்பற்றி பேசும்போதோ அல்லது விசாரிக்கும்போதோ அவர் முதலில் தீண்டத்தகாதவர் என்பதைப் பற்றி அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதைப்பற்றித்தான் பேசுவார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கேள்விக்கு ஒரு கட்டுரை வடிவில் காந்தி பதிலளித்தார். பெயரில் என்ன இருக்கிறது? என்ற அந்தக் கட்டுரையில் காந்தி சொல்கிறார்: “ஹரிஜன் என்ற பெயர் ஒருவித புனிதத்தன்மையோடு தொடர்புடையதாக இருக்கிறது. அஸ்பிரிஸ்யா (தீண்டாத்தகாதவர்), தலித்தா (உரிமை மறுக்கப்பட்டவர்) அல்லது பங்கிகள், மேதார்கள், சாமார்கள், பரியாக்கள் எனப் பல்வேறு வகையாக தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட மக்களை குறிப்பிடுகிற வார்த்தைகளுக்கெல்லாம் பதிலாக ஹரிஜன் என்ற வார்த்தை பொதுவாகக் குறிப்பிடப்பட்டது.”
காந்தி மேலும் தொடர்கிறார்: “அரசு அதிகாரிகள் இந்த மக்களை ஒரு அட்டவணையின் கீழ் கொண்டுவந்தார்கள். எனவே அவர்கள் பட்டியல் இனத்தவர் என்று அழைக்கப்பட்டார்கள். இப்படியாக குழப்பம் ஏற்பட்டு அது இன்னும் மோசமான சிக்கலாக மாறிவிட்டது.’’

வேதனையை எதிர்க்கும் வார்த்தை
இத்தகைய வரலாற்று நிகழ்வுகள் நமக்கு எதைத் தெரிவிக்கிறது என்றால், சாதியை எதிர்த்த இயக்கங்களின்போது பல்வேறு வார்த்தைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான். அன்றைக்கு இருந்த பிரிட்டிஷ் அரசாங்கமானது ஒரு வார்த்தைப் பிரயோகத்திற்குப் பதிலாக இன்னொரு வார்த்தையைப் பிரயோகிப்பது என்று முடிவெடுக்கவில்லை. அது, சில குறிப்பிட்ட சாதிகளை பட்டியலிட்டது; பட்டியலிடப்பட்ட சாதிகளைப் பட்டியலினத்தவர் என்று அழைத்தது. தற்போது இந்தக் குழப்பம் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சியில் இன்னும் தீவிரமாகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த அரசாங்கம், தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்றும்; அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள் என்றும் ஊடகங்களுக்கு அறிவுரை சொல்லத் துவங்கியிருக்கிறது.

இதற்கு, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு அளித்த உத்தரவை காரணமாக காட்டுகிறது. இதற்கு முன்பு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. பட்டியலினத்தவர் மற்றும் பட்டியலின பழங்குடியினர் என்ற பிரிவுக்குள் வருகிற சாதிகளை சேர்ந்தவர்களை தலித் என்று குறிப்பிடுவதிலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை; ஏனென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது எந்தவித சட்ட விதியிலோ அப்படி ஒரு வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்று நாக்பூர் நீதிமன்றம் கூறியிருந்தது.

இது தலித் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் தலித் என்ற வார்த்தை யாரையும் காயப்படுத்துவதாகவோ அல்லது எந்த சட்டத்தையும் மீறுவதாகவோ இல்லை என்று தலித் மக்கள் கருதுகிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்கிற நீதிமன்றம் மற்றும் அரசாங்க அறிவுறுத்தல்களுக்கு வலுவான காரணம் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் என்.முத்துமோகன் அவர்களுடன் இணைந்து நான் எழுதிய மார்க்சும் அம்பேத்கரும்- தொடரும் உரையாடல் என்ற நூலில் தலித் மக்களின் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விரிவான முறையில் ஆராய்ந்துள்ளேன். கெய்ல் ஓம்வெர்த் எழுதிய தலித்துகளும் ஜனநாயகப் புரட்சியும் என்ற நூலும் தலித் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்கிறது. இந்த அரசாங்கம், இதுபோன்ற நூல்களில் எப்படிப்பட்ட வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டும் என்றோ அல்லது பொது வெளியில் பிரச்சாரம் செய்யும் போது அல்லது ஆய்வுகள் செய்யும்போது எந்த வார்த்தை பயன்படுத்தப்பட வேண்டும் என்றோ உத்தரவு போடுமா?

பாஜக அரசின் தலித் விரோத முகம்
தலித் என்ற வார்த்தை 1970களில் மகாராஷ்டிராவில் முன்மொழியப்பட்டுத் பயன்படுத்தப்பட துவங்கியது. ஹரிஜன் என்ற வார்த்தை தற்போது பயன்பாட்டில் இல்லை. 1982இல் அரசாங்கம், அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், பட்டியலின சாதிகளைச் சேர்ந்தவர்களை குறிப்பிடும்போது ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறது.

தலித் என்ற வார்த்தையானது, சாதியக் கட்டமைப்பால் பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த மக்களின் வலியை உணர்த்துவதாக இருக்கிறது. கற்பி, ஒன்றுசேர், போராடு என்ற அம்பேத்கரின் முழக்கத்தின் அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுக்கிற மக்களின் அடையாளமாக தலித் என்ற வார்த்தை இருக்கிறது. ஆனால் பாஜக அரசாங்கம் அந்த வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தியிருப்பது, அதன் தலித் விரோத முகத்தை அம்பலப்படுத்துகிறது. ஜோதிபா பூலே, சுவாமி சிரத்தானந்தா, காந்தி, அம்பேத்கர் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட தலித் என்ற வார்த்தையானது ஒரு நிர்வாக உத்தரவால் ரத்து செய்யப்படக்கூடாது.

எஸ்.பி.குப்தா (எதிர்) இந்திய குடியரசுத்தலைவர் (1981) வழக்கில் தீர்ப்பளித்த ஏழு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு “சமூகத்தில் சமமற்ற தன்மை நீடிக்கிற நிலையில் பாலின நீதி, தொழிலாளர் நீதி, சிறுபான்மையினருக்கான நீதி, தலித் மக்களுக்கான நீதி என சம நீதியை வலியுறுத்துவது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட அரசியல் சாசன அமர்வானது, ‘தலித் நீதி’ என்ற பதத்தை பயன்படுத்தியதன் மூலம் தலித் என்ற வார்த்தையை அங்கீகரித்திருக்கிறது என்றே பொருளாகும். ஆனால் இன்றைய அரசாங்கமானது பிரிட்டிஷ் அரசாங்கம் கூட செய்யத் துணியாத காரியத்தைச் செய்வதற்கு முயற்சிக்கிறது என்பதுதான் வேதனையானது. தலித் என்ற வார்த்தையை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறபோது, இந்த வார்த்தை வேண்டாம் என எந்தவொரு தலித் இயக்கமோ அல்லது தலைவரோ கோரிக்கை கூட விடுக்காதபோது, அரசு இத்தகைய அறிவுறுத்தலைச் செய்வது என்பது அநீதியானது.

அரசியல் எழுச்சிக்கு உரம் போடும் வார்த்தை
நாடு முழுவதுமுள்ள தலித் மக்கள் தங்களுக்கெதிராக நடக்கும் வன்கொடுமைகளின் விகிதம் அதிகரிப்பதை எதிர்த்து அயராது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்; தலித் என்ற வார்த்தையே தலித் மக்களை எழுச்சிக் கொள்ளச் செய்திருக்கிறது; முன்னெப்போதையும் விட தற்போது நாட்டில் தலித் மக்களின் அரசியல் உணர்வு அதிகரித்திருக்கிறது; இத்தகைய பின்னணியில் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று ஆளும் அரசு உத்தரவு போடுகிறது என்றால், நாட்டின் ஒட்டுமொத்த தலித் மக்களையும் இன்னும் கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முனைப்பையே அது வெளிப்படுத்துகிறது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கம் தனது சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்ற மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

நன்றி: தி இந்து (ஆங்கிலம்) செப்.10
தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

Leave a Reply

You must be logged in to post a comment.