சென்னை;
சென்னை-சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் என்று
சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான
பொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் பகுதியில் 500 மரங்கள் வெட்டப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், மரங்களை வெட்டக் கூடாது என்ற உத்தரவை மீறினால்
எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும். எந்த சூழ்நிலையில் மரங்கள் வெட்டப்பட்டன என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். நில அளவைப் பணிகள் நடைபெறும் போது ஏன் மரங்களை வெட்டினீர்கள்? ஒரு மரத்தை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு ஏராளமான மரங்களை வெட்டியுள்ளீர்கள். மரங்களை திருட்டுத்தனமாக வெட்டுவதால் ஏன் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் ஏழை மக்களின் நிலைமை உங்களுக்குப் புரியும் என்று நீதிபதிகள் கூறினர்.

நில அளவீடு மற்றும் மரங்கள் வெட்டியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். மரங்கள் வெட்டும் பணி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வு
தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.