தீக்கதிர்

சிலைக்கடத்தல் வழக்கு மாற்றம் : நிலைபாட்டை தெரிவிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!

சென்னை;
சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு எடுத்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு விசாரித்தது. அப்போது சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கூறினர். அதற்கு தமிழக அரசு தரப்பில், வழக்கு தொடர்பான ஆவணங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளது. ஆவணங்களை நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்வதாகக் கூறியது.

மேலும், கும்பகோணத்தில் உள்ள வழக்குகளை மட்டுமே பொன் மாணிக்கவேல் குழு விசாரிக்கும் என்றும், வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கவே சிபிஐக்கு மாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டது.

இதையடுத்து, சிலைக் கடத்தல் வழக்குகள் மாற்றப்பட்டது தொடர்பாகக் தனது நிலைபாட்டை தெரிவிக்குமாறு சிபிஐ தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.