தீக்கதிர்

கோவை குண்டுவெடிப்பு வழக்கு 20 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் கைது

கோவை,
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவராக கருதப்பட்டு 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டார்.

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலர் பலியானதுடன், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நோகு என்ற ரஷீத். இவரை சுமார் இருபதாண்டு காலமாக காவல்துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவின் தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின்படி செவ்வாயன்று ரஷீத் தில்லியில் இருந்து சென்னை வரும்போது கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.