கோழிக்கோடு;
பிரிவினைவாதத்தை வளர்த்து மக்களை மோதவிடுகிற பாஜக, ஆர்எஸ்எஸ் தலைமை, கேரளத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோழிக்கோடு, மாவட்ட மாநாட்டை துவக்கி வைத்த பிருந்தா காரத் மேலும் பேசியதாவது:
பெருவெள்ளத்தால் ஏற்பட்ட துயரத்தை மதம், சாதிகளை மறந்து ஒன்றுபட்டு கேரளம் எதிர்கொண்டது. அது நாடு முழுவதும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. இங்குள்ள மீன் தொழிலாளர்களிடமிருந்து பாஜக – ஆர்எஸ்எஸ் தலைமை கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரையும் அவர்கள் மதத்தையோ, சாதியையோ, அரசியலையோ பார்க்காமல் மரணத்திலிந்து மீட்டெடுத்தனர். ஆனால், பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையிலும் தரம் கெட்ட, விஷம் பரப்பும் பிரச்சாரங்களை சமூக ஊடகங்கள் மூலம் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் நடத்தின. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பினால் அது ஒரு பகுதியினருக்கு மட்டுமே கிடைக்கும் என்று கூட பிரச்சாரம் செய்தனர்.ஒற்றுமையான இந்தியாவை நாம் உருவாக்கும்போது, அமித்ஷாவும், கூட்டாளிகளும் அதை தகர்த்து வருகிறார்கள்.

வகுப்புவாத சக்திகளுக்கும், மத அடிப்படை வாதிகளுக்கும் எதிரான போராட்டத்தில் பெண்கள் முன் வர வேண்டும். பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் துயரத்தில் இருக்கும் மக்களை பாதுகாக்க ஒவ்வொரு பெண்ணும் களமிறங்க வேண்டும். முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், துயரங்களைக் கடந்து புதிய கேரளத்தை படைக்க நம்மால் முடியும். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட துரோக நடவடிக்கைகள் மூலம் மக்களிடமிருந்து மத்திய அரசு ஜேப்படி செய்கிறது. மக்களை துயரத்துக்கு உட்படுத்தும் இந்த ‘ஜேப்படி அரசு’க்கு எதிராக மக்கள் போராட்டங்கள் எழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.