சென்னை,
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய காவல் துறை உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கலால் வரித்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து குட்கா பங்குதாரர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி மருத்துவர் பி.செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி கே.கே.பாண்டியன் ஆகிய 5 பேரையும் கைது செய்ததோடு நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கைதான 5 பேரிடமும் 2-வது நாளாக விசாரணை நடந்தது. இதற்கிடையே, டைரியில் உள்ள தகவல்களின் அடிப்படையில் காவல் உயர் அதிகாரிகள் மன்னர் மன்னன், சம்பத் ஆகிய இருவருக்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். மன்னர் மன்னன் புழல் உதவி ஆணையராக இருந்தவர். தற்போது மதுரையில் ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அதேபோல் செங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய் வாளராக பணியாற்றிய சம்பத், தற்போது தூத்துக் குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், 2 மற்றும் 3-ம் நிலையில் உள்ள காவல்துறை, சுகாதாரத் துறை ஊழியர்களிடமும் விசாரணை நடத் தப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.