ஈரோடு,
ஜம்பை பேரூராட்சியில் குடிநீர் வரி உயர்வை திரும்பப் பெறக்கோரி அனைத்துக் கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா ஜம்பை பேரூராட்சியில் வீடுகளுக்கான குறைந்தபட்ச குடிநீர் கட்டணம் ரூ.55-லிருந்து தற்போது ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், குடியிருப்புகளுக்கான புதிய இணைப்புக்கான முன்வைப்பு தொகை ரூ.6 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகம், தொழிற்சாலைகளுக்கான குடிநீர் சம்பந்தமான கட்டணங்களும் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அபரிமிதமான குடிநீர் கட்டணம் மற்றும் வீட்டு வரி  உயர்வை திரும்பப் பெற வேண்டும். மேலும், கட்டாயமாக மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள குப்பை வரி போன்ற சுமைகளை கைவிடவேண்டும் என வலியுறுத்தி ஜம்பை பேரூராட்சி பகுதிகளில் உள்ள வணிகர்கள் சங்கம், பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இம்மனுவினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கமிட்டி உறுப்பினர் டி.ராஜேந்திரன், திமுக நிர்வாகி சௌந்தரராஜன். காங்கிரஸ் தங்கவேலு, தேமுதிக நிர்வாகி விஜயேந்திரன், பாமக நிர்வாகி சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆற்றலரசு, தமிழ்ப்புலிகள் கட்சி செம்பன், ஆதித்தமிழர் பேரவை தருமலிங்கம், பெரியார் திராவிட கழகம் வேணுகோபால் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.