தீக்கதிர்

கிடப்பில் போடப்பட்டிருக்கும் புதிய பேருந்துகள்!

திருப்பூர் அரசுப் பேருந்து பணிமனையில் போக்குவரத்துக் கழகத்தால் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள் வழித்தடத்தில் இயக்கப்படாமல் வெயில், மழையில் காட்சிப் பொருளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருப்பூர் கிளை 1, 2 இரண்டிலும் சேர்ந்து வருவிக்கப்பட்டது முதல் மொத்தம் 11 புதிய பேருந்துகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகம் கோடிக்கணக்கில் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், பொதுமக்கள் நலனுக்காக புதிய பேருந்துகள் வாங்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில அமைச்சர் பெருமிதம் கொண்டார். இச்சூழலில் மக்கள் நலனுக்காக வாங்கப்பட்ட பேருந்துகள் மக்களுக்குப் பயன்படாமல் காட்சிப் பொருளாக நிறுத்தப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து விசாரித்தபோது, புதிய பேருந்துகளை சாலைகளில் இயக்குவதற்கு சாலை வரி செலுத்த வேண்டும். ஒரு பேருந்துக்கு தோராயமாக ரூ.20 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். இந்த சாலை வரியைகட்டாத நிலையில்தான் புதிய பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்துக் கழகத்தார் கூறினர். தமிழகத்திலேயே வசூலில் முன்னணியில் இருக்கும் பகுதிகளில் திருப்பூர் மண்டலமும் ஒன்று. இங்கேயே பேருந்துக்கு சாலை வரி கட்டவில்லை என்றால், வேறு எந்த பகுதியில் சாலை வரி கட்டப் போகிறார்கள் என்று சிஐடியுவினர் கேள்வி எழுப்புகின்றனர். அதுவும் திருப்பூர் மண்டலத்தில் திருப்பூர் இரு கிளைகளில் மட்டுமின்றி இங்குள்ள எட்டு கிளை பணிமனைகளிலுமே மொத்தம் 40க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் இரு மாதங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.ஒரு பக்கம் இயக்குவதற்கு தகுதியில்லாத ஓட்டை உடைசல் பேருந்துகளை தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையிலும் இயக்கச் சொல்லும் போக்குவரத்து நிர்வாகம், மறுபக்கம் புதிய பேருந்துகளை நிறுத்தி வைத்து இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

எந்தவொரு பொருளுமே புதிதாக இருந்தாலும் பயன்படுத்தாவிட்டால் வீணாகப் போகும். பேருந்தும் இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு மாதங்களுக்கு மேலாக இயக்காததால் அதன் மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஒருபுறம், முடங்கிக் கிடப்பதால் வெயில், மழையில் காய்ந்து போய் பேருந்து பாகங்கள் பாதிப்படைவதால் ஏற்படும் இழப்பு மறுபக்கம் என இரு வகைகளிலும் போக்குவரத்துக் கழகத்துக்கு இது பேரிழப்புதான் என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து போராட்டம் நடத்தினால் மிகப்பெரிய வரவு, செலவு கணக்கைக் காட்டி நஷ்டம் ஏற்படுவதாக கூப்பாடு போடும் அரசு நிர்வாகமும், ஆளும் அமைச்சர்களும், இப்போது கிடப்பில் போட்டு இழப்பு ஏற்படுத்தி வருவதைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது ஏன் என்றும் சிஐடியு சங்கத்தார் கேள்வி எழுப்புகின்றனர். கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய பேருந்துகளை உடனடியாக இயக்குவதன் மூலம் நியாயமான பதில் கொடுக்குமா அரசு நிர்வாகம்?

– (ந.நி)