தீக்கதிர்

காசர்கோடு மத்தியப் பல்கலை.யில் தலித் மாணவருக்கு ஆதரவாக பேசிய பேராசிரியர் நீக்கம்..!

காசர்கோடு;
ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர் சாதியப் பாரபட்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக அவரை பழிவாங்கும் வகையில், பல்கலைக்கழக துணைவேந்தருக்கு, மத்திய பாஜக அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் நெருக்கடி கொடுத்து வந்தனர். அதற்குப் பணிந்து, துணைவேந்தரும் ரோஹித்தை பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற்றினார். ரோஹித்திற்கு கிடைத்து வந்த உதவித்தொகையையும் நிறுத்தினார். தங்குவதற்கு இடமின்றி வெட்டவெளியில் ரோஹித் தள்ளப்பட்டார்.

இதில் மனமுடைந்தே, ஒருகட்டத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே ரோஹித் தற்கொலை செய்து கொண்டார்.தற்போது, கேரள மாநிலத்திலுள்ள காசர்கோடு மத்தியப் பல்கலைக்கழகத்திலும் அதேபோன்றதொரு சதிவேலையில், பாஜக-வினர் இறங்கியுள்ளனர்.
காசர்கோடு பல்கலைக்கழக ஆய்வு மாணவராக இருக்கும் கந்தோதி நாகராஜூ, பல்கலைக்கழக தீ எச்சரிக்கை அறையில் இருந்த கண்ணாடியை உடைத்து விட்டார் என்று, பிரச்சனையைத் துவங்கியுள்ள அவர்கள், அவருக்கு ஆதரவாக பேசிய பேராசிரியர் ஒருவரையும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

“ஒரு சிறிய தவறுக்காக, நாகராஜூ-வை கிரிமினலாக்கி அவரைக் கைது செய்திருப்பது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது; பல்கலைக்கழக வளாகத்துடன் முடிந்திருக்க வேண்டிய விவகாரம் ஊதிப் பெரிதாக்கப்பட்டு உள்ளது: கண்ணாடியை உடைத்ததற்காக நம் மாணவர் ஒருவர் சிறையின் குளிர்ந்த தரையில் படுத்திருப்பது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது” என்பதுதான் ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரசாத் பணியன் முகநூலில் பதிவிட்ட செய்தி. ஆனால், இதற்காக அவரைப் பணி நீக்கம் செய்துள்ளனர்.

“பிரசாத் பணியன், பலமுறை பல்கலைக் கழகத்தை விமர்சித்துள்ளார்; அவர் மீது சக பேராசிரியரே புகார் அளித்துள்ளார்; அதனடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று துணை வேந்தர் கே. ஜெயபிரசாத் சமாளித்துள்ளார்.ஆனால், இதனை காசர்கோடு பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏற்கவில்லை. கந்தோதி நாகராஜூவின் கைதையும், பேராசிரியர் பிரசாத் பணியனின் பணி நீக்கத்தையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

மாணவர்கள், பேராசிரியர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவுவது, இது முதல் முறையல்ல, பல்கலைக்கழக செயல்பாடுகளை நியாயமாக விமர்சித்தாலே அவர்களை பழிவாங்க துடிக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர்கள், அண்மைக் காலமாக சங்-பரிவார பேர்வழிகளின் தலையீடு பல்கலைக்கழக நிர்வாகத்தில் அதிகரித்து விட்டதே இதற்கு காரணம் என்றும் விமர்சித்துள்ளனர்.