திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண் கல்லூரியில், பாலியல் புகார் தெரிவித்த வேளாண் கல்லூரி மாணவி பாதுகாப்புடன் கல்வி பயில வலியுறுத்தி, மாதர்-  மாணவர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார். இம் மாணவி திடீரென திருச்சி நாவலூர் பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக, கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதேபோல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி, பாதுகாப்புடன் அதே கல்லூரியில் கல்வி பயில வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  மாவட்டத் தலைவர்கள் ஆர்.முத்துசெல்வம், எஸ்.செல்வி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாதர் சங்க மாநிலத் தலைவர் வாலண்டினா, மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் திலீபன், வழக்கறிஞர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.அபிராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டச் செயலாளர்கள், எஸ்.லூர்துமேரி, சு.பிரகாஷ், மாலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் இரா.அண்ணாமலை, மாநில செயற்குழு உறுப்பினர் ந.அன்பரசன் மாவட்டப் பொருளாளர் கலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.