அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருப்புக்கோட்டை ஒன்றியக்குழு சார்பில் நமது கிராமம்.. நமது உரிமை… என்ற முழக்கத்தோடு 5 நாட்கள் தொடர் நடை பயணம் நடைபெற்றது. நடைபயணம் செல்லும் வழியெல்லாம் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேவேளை, பயணம் சென்ற 51 கிராமங்களிலும் எண்ணிப்பார்க்கமுடியாத அளவிற்கு மக்கள் அனுபவிக்கும் எண்ணற்ற பிரச்சனைகளும் நடைபயணத்தை வரவேற்றன.
நமது கிராமம்… நமது உரிமை என்ற முழக்கத்தோடு, கிராமங்களை நோக்கி நடை பயணம் தொடர்ந்து 5 நாட்கள் 100 கி.மீ தூரம் நடைபெற்றது. மத்திய அரசு, விவசாயிகள் அனைவருக்கும் உரம், பூச்சி மருந்து மற்றும் விதை ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும்; விளைவித்த பொருட்களுக்கு அறிவித்தபடி ஒன்றரை மடங்கு விலை தர வேண்டும்; மாநில அரசு, 100 நாள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்; அனைத்து கார்டுதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் வழங்கிட வேண்டும்; அனைத்து கிராமங்களிலும், சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என இந்த நடைபயணத்தில் வலியுறுத்தப்பட்டது.

முதல் நாள் பாலையம்பட்டி எனும் கிராமத்தில் துவங்கியது. பின்பு, கோபாலபுரம் சென்றனர். அங்கு பாலவநத்தம் முதல் கோபாலாபுரம் வரையுள்ள 9.5 கி.மீ தூரமுள்ள பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம் அரையும் குறையுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

திருவிருந்தாள்புரம் கிராமத்திற்கு சென்றபோது, கிராம மக்கள் கூறிய புகாரால் நடை பயணத்தில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்கு காரணம், அக்கிராமத்தில் ஏராளமான வீடுகளில் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அங்குள்ள குடிநீர் மோசமாக உள்ளதால், இந்த நிலை ஏற்பட்டதாகவும், வேறு வழியின்றி அந்த குடிநீரை பருக வேண்டியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

பல கிராமங்களில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் கிடைக்கவில்லை. இதனால், உப்பு நீரையே கிராம மக்கள் குடித்து வருகின்றனர்.பல முதியோர்கள் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை எவ்வித அறிவிப்புமின்றி திடீரென நிறுத்தப்பட்டு விட்டதாகவும், அதை மீண்டும் வழங்க வேண்டுமெனில் கையூட்டு தர நிர்பந்தம் செய்வதாகவும் தெரிவித்தனர். இது ஒரு புறமிருக்க, முதியோர் உதவித் தொகை பெறத் தகுதியான ஏராளமானோர் கிராமங்களில் உள்ளனர். பலமுறை மனுக் கொடுத்தும் தங்களுக்கு உதவித் தொகை வரவில்லையெனவும் அவர்கள் புகார் கூறினர்.

100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கி வருவதும், மாதத்திற்கு 5 முதல் 7 நாட்கள் மட்டுமே வேலை தருவதாகவும் விவசாயத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
உருளை குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாலை வசதி முற்றிலும் இல்லை என்பதும் நடை பயணத்தில் தெரிய வந்தது. கடந்த 2011 இல் சுக்கில் நத்தம் கிராமத்தையடுத்து அவசர கதியில் சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அங்குள்ள 100 வீடுகளில் தற்போது வெறும் 16 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர். காரணம், சமத்துபுரம் செல்ல பேருந்து வசதி இல்லை. போக்குவரத்து நிர்வாகம் பேருந்து வசதி செய்ய வேண்டும் என நினைத்தால் கூட, அச்சாலையில் வாகனம் செல்ல முடியாது. அந்த அளவிற்கு சாலை மிகவும் மோசம். இதனால், 84 குடும்பங்கள் வீட்டை காலி செய்துள்ளனர்.

இதுபோன்ற ஏராளமான அனுபவங்கள், 5 நாட்கள், 100க்கும் மேற்பட்ட தோழர்கள் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கிராமப் பகுதிகளுக்கு சென்றதால் கிடைத்தன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அடிப்படை வசதிக்காக வரும் அக்டோபர் மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாகவும் நடை பயணத்தில் பங்கேற்ற தோழர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.
இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எம்.முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, ஒன்றிய செயலாளர் எம்.கணேசன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மீ.சிவராமன், மாவட்டத் தலைவர் எம்.ஜெயபாரத், சரவணன் ஆகியோர் உட்பட ஒன்றியகுழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.