தீக்கதிர்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,
ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளத்தை முறையாக வழங்கக்கோரி ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் 289 தொழிலாளர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத சம்பளம் தற்போதுவரை வழங்கப்படவில்லை. இதனை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திங்களன்று ஈரோட்டிலுள்ள பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலர் வி.மணியன், ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க மாநில அமைப்பு செயலர் எஸ்.வளர்மதி, என்எப்டிஇ மாநில அமைப்பு செயலர் என்.புண்ணியகோடி ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கமாவட்டச் செயலாளர் எல்.பரமேஸ்வரன், என்எப்டிஇ மாவட்டச் செயலாளர் என்.பழனிவேலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.