உதகை,
இருசக்கர வாகன மானியம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் உரிய காலக்கெடுவிற்குள்மானியம் கோரி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் பணிக்கு செல்லும் / சுய தொழில் செய்யும் மகளிருக்கு 50 சதவிகிதம் அல்லது ரூ.25 ஆயிரம் (எது குறைவோ)  மானியத்தில் இருசக்கர வாகனம் பெற்று, தங்கள் பணியிடங்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர ஏதுவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கிராம மற்றும் நகர்புறங்களிலிருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு 2017-18ம் ஆண்டிற்கான ஒதுக்கீடாக 1074 பயனாளிகளுக்கு மானியம் வழங்க அரசு ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 1074 பயனாளிகள் மாவட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் இதுவரை 246 பயனாளிகள் மட்டுமே இருசக்கர வாகனம் வாங்கி மானியத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இத்திட்டம் தொடங்கிஒரு வருடங்கள் நிறைவுற்றும் ஏனைய பயனாளிகள் மானியம் கோரி விண்ணப்பிக்கத் தவறியதால், அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தாமதமாகிறது. எனவே, தேர்ந்த பயனாளிகள் அக்.15 ஆம் தேதிக்குள் இருசக்கர வாகனங்களை கொள்முதல் செய்து உரிய விதிமுறைகளின்படி மானியம் கோர தவறும்பட்சத்தில், அவர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு புதிய பயனாளிகளுக்கு வாய்ப்புவழங்கப்படும். எனவே, விண்ணப்பித்து தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் உரிய காலக்கெடுவிற்குள் மானியம் கோரிவிண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: