சாத்தூர்;
தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கல்வியில் தான் உள்ளது; எனவே, தங்களது ஊரில் அரசுப் பள்ளி கொண்டு வர வேண்டும் என்பதே அன்பின் நகரத்து பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதற்காக அம்மக்களோடு நின்று 7 ஆண்டுகள் அயராது போராட்டம் நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதன் பலனாக அரசு தொடக்கப் பள்ளி தொடங்க அரசு உத்தரவிட்டது.

பள்ளி வரக் காரணமாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அன்பைப் பொழிந்தனர் அன்பின் நகரத்து மக்கள்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே , வெம்பக் கோட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது அன்பின் நகரம். அன்பின் நகரத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும். ஏராளமான பட்டாசுத் தொழிலாளர்களும், விவசாயிகளும் உள்ள கிராமமாகும். இங்குள்ள குழந்தைகள் படிக்க வேண்டுமெனில் சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணைக்கு செல்ல வேண்டும்; அல்லது சாத்தூர் செல்ல வேண்டும். எப்போதாவது தான் ஊருக்குள் பேருந்து வரும். இதனால் பல மாணவ, மாணவிகள் கல்வியை பாதியிலேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் கடந்த 2011 வரை ஆரம்பப் பள்ளி அங்குள்ள வாடகை கட்டிடத்தில் நடைபெற்று வந்தது. பின்பு, அத்திட்டம் நிறைவடைந்து விட்டது. எனவே, பள்ளியை தொடர முடியாது என அரசு கைவிரித்து விட்டது. அப்போது, அப்பள்ளியில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

இதனால், ஊர் மக்கள் செய்வதறியாது திகைத்து வந்தனர். அங்கிருந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுவிற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, அருகில் உள்ள தேவாலயத்தில் பள்ளியை தொடர ஊர் மக்கள் சார்பில் பாதிரியார் ஜார்ஜிடம் கோரிக்கை வைத்தனர். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்ற ஏராளமான தொடர் போராட்டங்களுக்கு திட்டமிட்டு நடத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, வெம்பக்கோட்டை கல்வி அலுவலகம் முற்றுகை, சாத்தூரில் ஆர்ப்பாட்டம் என ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. பின்பு, அரசு அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக மனுக் கொடுத்தல், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனுக் கொடுத்தனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் 2018 இல் அன்பின் நகரத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைக்க அரசு உத்தரவிட்டது. இதனால் கிராம மக்கள் எல்லையில்லா ஆனந்தமடைந்தனர். மேலும், தங்களது லட்சியத்திற்காக போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்தனர்.

உற்சாக வரவேற்பு
பாராட்டு விழாவிற்கு வந்திருந்த தோழர்களை ஊர் மக்கள், கொட்டு மேளத்துடன் பட்டாசுகள் வெடித்து ஊர் எல்லையில் வரவேற்றனர். பின்பு, ஊர்வலமாக விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

அன்பின் நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.டேனியல் தலைமை தாங்கினார். ஊர்த் தலைவர்கள் உலகராஜ், ஜீவானந்தம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.வினோத் வரவேற்புரையாற்றினார். அற்புத தேவசபை தலைமை போதகர் வி.டி.ஜார்ஜ், தலித் விடுதலை இயக்கத்தின் ரவிக்குமார், விசிக தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயசீலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பி.சார்லஸ் நன்றி கூறினார்.

“ வீட்டிற்கு ஒரு புரட்சியாளர் வர வேண்டும்“
இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது,மக்களுக்காக போராடுவது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களின் பணியாகும். போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டால் அப்போராட்டம் வெற்றியடைகிறது. அன்பின் நகரத்து மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் பின்னால் உறுதியாக நின்ற காரணத்தால் அதில் வெற்றி பெற முடிந்தது. இது ஒரு முன் மாதிரியான போராட்டமாகும்.

கல்வி என்பது ஒரு ஆயுதம். மனு நீதி என்ற பெயரால் அனைவருக்கும் கல்வி மறுக்கப்பட்ட காலம் இருந்தது. சூத்திரர்களுக்கு கல்வி, சொத்து, ஆயுதம் வழங்கக் கூடாது என மனுநீதி தெரிவித்தது. கல்வி கொடுத்தால், எதிர்த்து கேள்வி கேட்பார்கள்; சொத்து கிடைத்தால் பொருளாதாரத்தில் உயர்ந்து விடுவார்கள். ஆயுதம் கொடுத்தால், எதிர்த்துப் போராடுவார்கள் என எண்ணியே அது மறுக்கப்பட்டது. மனு நீதியில், பெண்ணாக பிறந்து விட்டாலே அவர்கள் சூத்திரர்கள் தான் எனக் கூறப்பட்டது.

இதை எதிர்த்து பல ஆண்டுகள் போராடியதன் விளைவாக அனைவருக்கும் கல்வி வழங்க சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் பாஜக ஆளும் பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. பள்ளிகளை மூடுவதை பாஜக அரசு கொள்கை முடிவாக வைத்துள்ளது. இந்நிலையில், அன்பின் நகரத்தில் புதிய பள்ளி கட்ட அனுமதி வாங்கியிருப்பது வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி கண்டது போலாகும்.

கல்வி நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. வீட்டிற்கு ஒருவர் படித்து விட்டு ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகளாக மாறலாம். அதேநேரத்தில் வீட்டிற்கு ஒரு புரட்சியாளர் உருவாக வேண்டும். அதிலும், தன்னலம் இன்றி பொது நலன் தான் முக்கியம் என்ற லட்சியத்தோடு போராடுகிற புரட்சியாளர் உருவாக வேண்டும்.

எனவே, நமது வாழ்க்கைத் தரம் உயர மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர, நாம் தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துக்குமார், சி.முருகேசன், ஒன்றிய செயலாளர் எஸ்.சரோஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சுந்தரபாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மீ.சிவராமன், ஒன்றியச் செயலாளர் ஆர்.கதிர், சிபிஎம் கிளைச் செயலாளர் சரளா உட்பட பலர் பங்கேற்றனர்.
(ந நி)

Leave a Reply

You must be logged in to post a comment.