புதுதில்லி;
நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு அக்டோபர் மாதம் முதல் மாதாந்திர தொகுப்பூதியத்தை சற்று உயர்த்தி வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று மாலை அறிவித்துள்ளார்.

தொகுப்பூதிய உயர்வு அறிவிப்பதற்கு சற்று முன்பு தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்கள் மூலம் பலன்பெற்று வரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களில் சுமார் ஒரு கோடிப் பேர் போலிகள் என்றும் அவர்கள் அனைவரின் பெயரும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் அதிரடி அராஜக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

நாடு முழுவதும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என சுமார் 10 கோடி பேருக்கு, 14 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆஷா எனப்படும் மத்திய சுகாதாரத் திட்ட ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றாமல் பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நிரந்தரமாக பணி செய்ய வேண்டிய நிலையில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் நிரந்தரமாகவே தற்காலிக ஊழியர்களாக துயருற்று வருகின்றனர். இந்த நிலைக்கு எதிராக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்சமயம் அங்கன்வாடி ஊழியர்கள் மாத தொகுப்பூதியமாக பெற்று வரும் ரூ. 3 ஆயிரத்தை ரூ.4500 ஆகவும், அங்கன்வாடி ஊழியர்கள் பெற்றுவரும் ரூ.2200ஐ
ரூ.3500ஆகவும் உயர்த்துவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதே வேளை, பலன்பெற்று வரும் 10 கோடி பேரில் ஒரு கோடிப் பேரின் பெயர்களை நீக்கியிருப்பதாக மேனகா காந்தி அறிவித்துள்ளார். இன்னும் ‘போலிகளை’ கண்டறிய அதிகாரிகளை களமிறக்குவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். அசாம் மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் சோதனை நடத்தியபோது பல மையங்களில் பட்டியலில் பெயர் இருந்த குழந்தைகள், அதிகாரிகள் வந்த நேரத்தில் மையத்தில் இல்லை என்று காரணம் காட்டி, அந்த மாநிலத்தில் மட்டும் 14 லட்சம் பேரின் பெயர்களை போலிகள் என முத்திரை குத்தி நீக்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் வந்த சமயத்தில் மையங்களில் இல்லாத குழந்தைகள் மற்றும் பெண்களின் பெயர்களை நீக்குவது என முடிவெடுத்து ஒரு கோடி பேரின் பெயர்களை நீக்கியிருப்பதாகவும் மேனகா காந்தி பெருமிதம் பொங்க கூறிக் கொண்டுள்ளார்.

உண்மையில், அங்கன்வாடி மையங்களை படிப்படியாக ஒழித்துக் கட்டுவதே இதன் பின்னால் இருக்கும் சதியாகும். ஒரு கோடிப் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இந்த உண்மை களை மறைக்கும் நோக்கத்துடன், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆஷா திட்ட ஊழியர்களுக்கு மிக மிகக்குறைவான தொகுப்பூதிய உயர்வை அறிவித்து, லட்சக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை ஏமாற்றியிருக்கிறது மோடி அரசு.
(பிடிஐ விபரங்களுடன்)

Leave a Reply

You must be logged in to post a comment.