கோவை,
பெட்ரோல், டீசலின் வரலாறு காணாத விலை உயர்வு உள்ளிட்ட மத்திய அரசின் மோசமான செயல்பாடுகளை கண்டித்து திங்களன்று நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோவை நகரம் ஸ்தம்பித்தது.மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் திங்களன்று வேலைநிறுத்த போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் அனைத்து கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதாகினர். மேலும், மத்திய அரசிற்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மளிகைகடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவற்றை அடைத்து வணிகர்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

இதேபோல், கோவையில் 100 சதவிகித லாரிகள், 80 சதவித ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை, உக்கடம், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் வெளி மாநில பேருந்துகள் இயக்கப்படாமல் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது. சிறு,குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் கோவை காந்திபுரத்தில் திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் மயூரா எஸ்.ஜெயகுமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வி.பெருமாள், என்.ஜெயபாலன், கே.அஜய்குமார், அமுதா, கே.எஸ்.கனகராஜ் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆறுமுகம், கொ.ம.தே.க. மற்றும் திமுககழகம் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பொள்ளாச்சியைஅடுத்த ஆனைமலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுவின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றியக்குழு செயலாளர் வி.எஸ்.பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் திரளானோர் பங்கேற்று கைதாகினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.