சென்னை;
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்காமலும், போதிய அவகாசம் வழங்காமல் காவல்துறையின் துணையோடு இடிக்கும் பணியை அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன் விவரம் வருமாறு:-சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் 1971ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சியில், குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இங்கு 300 வீடுகளில் சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இந்த கட்டிடம் பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பொதுமக்கள் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகளை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்ட முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள குடியிருப்புகளை முழுவதுமாக இடித்துவிட்டு, மத்திய அரசின் நிதி உதவியோடு 13 அடுக்கமாடி கொண்ட கட்டிடம் கட்டப்போவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படும் 13 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. ஒரே பகுதியில் மக்கள் தொகை அதிகமானால், நிலத்தடி நீர் மட்டுமின்றி, மின்சாரம் உட்பட பல பிரச்சனைகள் ஏற்படும். அதே நேரத்தில் பொதுமக்களுக்கு போதிய போக்குவரத்து வசதிகளும் இருக்காது என பொதுமக்கள் கூறுகின்றனர். இத்திட்டம் வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டுமே தவிரவிற்பனைநோக்கோடு செயல்படுவது மக்கள் நலத்திட்டம் கிடையாது என்றும்,மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தையும், சந்தேகத்தையும் போக்க வேண்டும் என சிபிஎம் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் என பல வடிவங்களில் குடிசை மாற்றுவாரிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் இந்தப் போராட்டத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் , மாநகராட்சி அதிகாரிகள், 500க்கும் மேற்பட்ட போலீசார் சத்தியமூர்த்தி நகருக்கு வந்தனர். பிறகு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க தயாரானார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.  பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் விஜயகுமார், அப்பகுதி பொறுப்பாளர் ராஜ்குமார், முனியசாமி, சிபிஐ பொறுப்பாளர் சுப்பிரமணி, ஜியா(திமுக), சிவா(சமூகஆர்வலர்), ஆதவன் (விசிக), நாராயணன் (தேமுதிக) ஆகியோர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திடீரென அங்குவந்த காவல்துறை உயர்அதிகாரி அரசு உத்தரவை மீற முடியாது எனக் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் சில வீடுகளில் உள்ள நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைக்காமல் வெளியே இழுத்து வந்து வீட்டின் கதவை உடைத்தனர். இதனால் பொதுமக்கள், வீடுகளுடன் எங்களையும் சேர்த்து இடியுங்கள் எனக் கூறி, வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். பெண்கள் சிலர் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். சிலர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உடனே போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் கேன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: