தீக்கதிர்

மறியல் போர் : நாடு முழுவதும் இடதுசாரிகள் ஆவேசப் போராட்டம்…!

புதுதில்லி/சென்னை:
மத்திய அரசின் நாசகர பொருளாதாரக் கொள்கையை கண்டித்தும், பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியை குறைக்க வலியுறுத்தியும் திங்களன்று (செப்.10) இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இதையொட்டி புதுதில்லி, மேற்குவங்கம், கேரளா, திரிபுரா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்பட அனைத்து மாநிலங்களிலும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஆவேசமிக்க மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுதில்லியில் நடைபெற்ற கண்டனப் பேரணி – மறியலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா எம்.பி., மற்றும் சிபிஐ(எம்எல்)லிபரேசன், எஸ்யுசிஐ(சி) ஆகிய கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய சீத்தாராம் யெச்சூரி, ஒவ்வொரு நாளும் உயர்த்தப்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளால் ஒவ்வொரு பொருளும் விலை உயரும்; இது கோடானு கோடி எளிய இந்திய மக்களை துயரத்தின் பிடியில் தள்ளும்; மறுபுறம் இதன் பலனை மத்திய பாஜக அரசுடன் கைகோர்த்துள்ள கூட்டுக் களவாணி பெருமுதலாளிகள் சூறையாடிச் செல்கிறார்கள் என்று சாடினார். 

பாஜக அரசாங்கம், ஏழை, எளிய, நடுத்தர இந்தியர்களின் முதுகை ஒடிக்கும் விதத்தில் சுமைகளை மேலும் மேலும் அராஜகமான முறையில் ஏற்றுகிறது; இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் யெச்சூரி கூறினார்.

இந்தியாவில் ரூ.85; வெளிநாட்டிற்கு ரூ.38க்கு தருவதா?
தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சிமிகு மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கேற்ற பல்லாயிரம்பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா சாலையில் தாராப்பூர் டவர் அருகே சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்) லிபரேசன், எஸ்யுசிஐ (சி) ஆகிய கட்சிகள் சார்பில் மறியல் நடைபெற்றது. கோரிக்கைகளை முழங்கி மறியலில் ஈடுபட்ட கட்சி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இப்போராட்டத்திற்கு தலைமையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயாளர் கே.பாலகிருஷ்ணன், “ஏழை, எளிய, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கும் பொருளாதார நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு 52 விழுக்காடு வரியும், மாநில அரசுகளின் வரியாலும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது. இதனால்தான் அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது.

இந்தியாவில் 85 ரூபாய்க்கு பெட்ரோலை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு 38 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் மோசமான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு குறைக்காததால், ஏழை நடுத்தர மக்கள், சிறு தொழிற்சாலைகள், விவசாயம் போன்றவை கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. மக்களின் சுமையை குறைக்க மத்தியஅரசும், மாநில அரசுகளும் வரிகளை குறைக்க வேண்டும், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை குறைக்காவிடில், மத்திய மாநில அரசுகளை ஆட்சியிலிருந்து அகற்றும் போராட்டத்தை தொடர்வோம்” என்று கூறினார்.

சரிபாதியாக குறைக்க முடியும்
சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி வருவதாலும், மாநில அரசுகளின் வரியாலும் வரலாறு காணாத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வரிகளை குறைப்பதன் மூலம் இவற்றின் விலையை சரிபாதியாக குறைக்க முடியும். ஏழை மக்களின் வயிற்றில் அடித்து கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மத்தியஅரசு பாதுகாக்கிறது” என்றார்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், எஸ்யுசிஐ (சி) மாநிலச் செயாளர் ஏ.ரெங்கசாமி, சிபிஐ (எம்எல்)லிபரேசன் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.குமார், சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்
14 ஆட்டோ தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.