புதுதில்லி:
தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி ஊழல் வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேத்தன் தேசாயைத் தப்பவிடும் வேலையில், குஜராத் மாநில அரசு பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

கேத்தன் தேசாயிடம், சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்தர் கேத்தன் தேசாய். இவர் தனது பதவிக்காலத்தில், நாடு முழுவதும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கல்லூரி ஒன்றுக்கு தலா 25 கோடி முதல் 30 கோடி ரூபாய் வரை பெற்றதாக கூறப்பட்டது. மேலும், 200 தனியார் மருத்துவக் கல்லூரிகள், தலா 5 மருத்துவப் படிப்புக்கான இடங்களை கேத்தன் தேசாய்க்கு ஒதுக்கீடு செய்ததும், அந்த இடங்களை பல கோடி ரூபாய்க்கு மாணவர்களுக்கு அவர் விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவக் கவுன்சிலே கலைக்கப்பட்டதுடன், கேத்தன் தேசாய் மீதும் கடந்த 2010-ஆம் ஆண்டு சிபிஐ மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தி‌ல்‌லி, ப‌ஞ்சா‌‌ப், ச‌ண்டிக‌ர் ம‌ற்று‌ம் குஜரா‌த் மா‌நில‌ம் அகமதாபா‌த்‌தி‌ல் உ‌ள்ள தேசா‌‌யி‌ன் அலுவலக‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌வீடுக‌ளில் நடத்தப்பட்ட சோதனையில், தேசாயின் அகமதாபா‌த் ‌வீ‌‌ட்டி‌ல் மட்டும் 212 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்குச் சொந்தமான கல்லூரியில் உள்ள லாக்கரிலும் பல கோடி ரூபாய் பணம் பிடிபட்டது. மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
இவற்றின் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, தேசாய் மீது 142 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அதன்பிறகு, கடந்த 8 ஆண்டுகளாக இவ்வழக்கில் தேசாயை விசாரிக்க முடியாத நிலை சிபிஐ-க்கு ஏற்பட்டுள்ளது. காரணம், அரசுப் பதவியில் குறிப்பிட்ட அந்தஸ்தில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்த சம்மந்தப்பட்ட அரசு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்பதே ஆகும்.
தேசாய், குஜராத் பாஜக அரசின் செல்லப்பிள்ளை என்பதால், அவரை விசாரிப்பதற்கு குஜராத் பாஜக அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இதுதொடர்பாக வெளிப்படையான அறிவிப்பையும் குஜராத் அரசு வெளியிட்டது.அண்மையில் பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் தேசாய் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குஜராத் அரசின் அனுமதி மறுப்பை சிபிஐ சுட்டிக்காட்டியது. தங்களின் கையறு நிலையை சிபிஐ எடுத்துரைத்தது.

மறுபுறத்தில், குஜராத் அரசின் அனுமதி இல்லாமல் தன்னை விசாரிக்கக் கூடாது என்று கேத்தன் தேசாய், தில்லி உயர்நீதிமன்றத்திற்கு சென்றார். அதனை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அரசு அனுமதி இல்லாமல் விசாரிக்கக் கூடாது என்று தேசாய்க்கு சாதகமாக உத்தரவிட்டு பிறப்பித்து விட்டது.இதனால், ஊழல் பேர்வழியான கேத்தன் தேசாய், பாஜக-வின் துணையுடன் மீண்டும் மீண்டும் விசாரணையிலிருந்து தப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: