சேலம் :

மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சிகளை சார்ந்த முன்னூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மத்திய பாஜக மோடி அரசு கடைப்பிடித்து வரும் நாசகர பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.  இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்கள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதியினரும் தாங்க முடியாத கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதும் அதன் பலனை அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்துள்ளது.

பாஜக அரசு கடந்த நான்கு வருடங்களாக கலால் வரியை உயர்த்தி கொள்ளையடித்தது. தற்போது பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க மறுத்து வருகிறது.  தமிழக அரசும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க மறுக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள்  கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம்,  சிபிஐ, சிபிஐ(எம்எல்), எஸ்யுசிஐசிசி கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சிபிஐ (எம்) மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் கண்டன உரையாற்றினார்.

இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, டி,உதயகுமார், எம்.சேதுமாதவன், எம்.குணசேகரன், எ.முருகேசன், வி.கே.வெங்கடாச்சலம், சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபிக்குமார், மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் மோகனசுந்தரம் சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன், எஸ்யுசிஐசிசி .நடராஜன் உள்ளிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) லிபரேசன், சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆஃப் இந்தியா(கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளை சார்ந்த மாவட்டகுழு, இடைக்குழு உறுப்பினர்கள், முன்னணி நிர்வாகிகள் முன்னூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.