தீக்கதிர்

மகளிர் விவசாயம்: புதிய வழி காட்டும் கேரளம்…!

===முனைவர். தி.ராஜ்பிரவீன்===
             கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் இடதுசாரி ஆட்சி பொறுப்புக்கு வந்த பின் விவசாயம் மற்றும் பல வளர்ச்சி துறைகள், திட்டங்களுக்கு அதிகம் முக்கியத்துவம்  தரப்படுகிறது. குறிப்பாக சிறு, குறு விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், நகர்ப்புற குடும்பப் பெண்களுக்கு என்று பல நலத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, அவர்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சூழலில் மீண்டும் வேளாண்மையில் பெண்களை இணைத்து இயற்கை முறையில் சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கேரளாவின் சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தும் பல வேளாண் சார்ந்த நலத்திட்டங்கள் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களிடம் ஒரு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் வேளாண்மையை நோக்கி கொண்டு வரும் புதிய முயற்சிகள் கேரளாவில்  திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞம் மற்றும் வேங்கனூர் பஞ்சாயத்துக்கள் சுற்
றுலா தொழில்துறை மற்றும் வேளாண்மை, மீன் பிடிப்பினை நம்பியிருக்கிறது. இந்த இரண்டு பஞ்சாயத்துகளிலும் விவசாயிகள் பெரும்பாலானோர் ஆண்களே.

வாழை, மரவள்ளிக்கிழங்கு மற்றும் பல காய்கறிகள் இங்கு முக்கிய பயிராக சாகுபடி  செய்யப்படுகிறது. இரசாயன இடுபொருட்களை நம்பியே இங்கு வேளாண்மை நடந்து வந்தது. கடந்த வருடம் முதல் திருவனந்தபுரத்தை அடிப்படையாகக் கொண்ட தனல் என்ற தொண்டு நிறுவனம் இந்த இரண்டு பஞ்சாயத்துக்களில் உள்ள பெண் விவசாயிகளுடன் பணிபுரியத் துவங்கியது.உள்ளூர் பெண்கள் குழுக்களுடன் இணைந்து பணிபுரிந்த இந்த தொண்டு நிறுவனம் பெண்களுக்கு தேங்காய் ஓட்டில் விளைபொருட்கள், காகித விளை பொருட்கள், உபயோகப்படாத துணி, சணல் போன்றவற்றில் விளை பொருட்கள் தயாரித்தல் பயிற்சிகளை வழங்கி வந்தது.

இருப்பினும் சில பெண் குழுக்கள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஆர்வம் காட்ட அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கிராமத்தலைவர்களுடன் இணைந்து கிராமத்தில் உள்ள நில உரிமையாளர்களை சந்தித்து அவர்கள் வீணாக வைத்திருக்கும் நிலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் பணிகளை துவங்கின. குறிப்பாக தென்னந்தோப்புகளில், தென்னைக்கு இடையே உள்ள இடைவெளியில் சாகுபடிப் பணிகள் துவங்கப்பட்டன. பல நடைமுறை பிரச்சனைகளை இந்த சாகுபடிப் பணிகளை மேற்கொள்ளும் போது
பெண்கள் குழு சந்தித்தது. பல இடங்களில் போதுமான தண்ணீர், பசுந்தாள் மற்றும் இயற்கை உரங்கள் கிடைக்க வில்லை.

இத்தகைய சூழலை எதிர்கொண்டு மீண்டும் மண்ணின் வளத்தை பெருக்கச் செய்ய மகளிருக்கு உயிர்பல் வகைமை, மண் மற்றும் பயிர்கள் சாகுபடிக்கு தேவைப்படும் இயற்கை வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. அதை யடுத்து ஒரு வருட காலத்தில் பெண்கள் இணைந்து தென்னந்தோப்புகள் யாவையும் பல்வேறு காய்கறிகள், கிழங்குகள் மற்றும் வாழை ஆகியவற்றை சாகுபடி செய்து உயிர் பல வகைமை தோட்டமாக மாற்றினர். இதனால் தென்னந் தோட்டங்களில் தேங்காய் உற்பத்தியும் அதிகரித்தது. நில உரிமையாளர்கள் இந்த மாற்றத்தை கண்டு மகிழ்ந்தனர்.

மேலும் பல விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இந்த தோட்டங்களை பார்வை
யிட்டு வேளாண் பணி செய்யும் மகளிருக்கு ஊக்கம் தந்தனர். பல நில உரிமையாளர்கள் தாங்களும் இப்புதிய செயல்திட்டத்தில் இணைந்து கொண்டனர்.முதலில் பெண் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை அருகில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்து வந்தனர். சிலர் விளைபொருட்களை அருகில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்தனர்.

மெதுவாக உற்பத்தி அதிகரிக்க விளை பொருட்களுக்கு தனிச் சந்தை அமைக்கும் நோக்கும் வலு பெற்றது. தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள இயற்கை அங்காடி களில் வைத்து தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். இவ்வாறு கேரளாவில் நிலமில்லாத பண்ணை மகளிர் குழுவாக இணைந்து இயற்கை வேளாண் சாகுபடியில் ஈடுபட்டு அதிக லாபம் பெறுகின்றனர். இதனால் நில உட மையாளர்கள், நுகர்வோருக்கும் அதிகப் பயன் கிடைக்கிறது.

மேலும் தங்களின் வீட்டுப் பொறுப்புகளையும் செய்து விட்டு கூடுதல் வருமானத்தையும் பெற்று இவ்விரு பஞ்சாயத்துகளில் உள்ள தோட்டக்கலை நிலங்களில் பல்வகை பயிர்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து விற்பனை செய்ய உதவிய கேரளாவின் வேளாண் முயற்சிகள் பாராட்டுக்குரியது.

நிலமில்லாத பெண் விவசாயிகளை இயற்கை சாகுபடி பணிகளில் பங்கேற்கச் செய்து, வெற்றிகரமாக சாகுபடிப் பணிகளை வீணான நிலத்தில் மேற்கொண்டு நிலவுடமையாளர்களுக்கு உற்பத்திப் பெருக்கம், நுகர்வோருக்கு இயற்கை வேளாண் விளைபொருட்கள், விற்பனை வாயிலாக அனைத்து பிரிவினரும் பங்கேற்கச் செய்யும்
வேளாண் முயற்சிகள் கொண்ட இந்த திட்டம். பல மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது.

கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள், குழந்தைகளுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகள், நுகர்வோருக்கு தேவைப்படும் இயற்கை விவசாயப் பொருட்கள் உற்பத்தி வாயிலாக கேரள மாநிலம் நமது தேசத்தின் புதிய வேளாண் செயல்திட்டங்கள், திட்டமிடுதல் மற்றும் வெற்றிகரமான செயல்பாடுகள் காரணமாக வழிகாட்டுகிறது என்பதில் சந்தேகமில்லை.

தகவல் ஆதாரம் : வீசா இந்தியா, தமிழ் சிறப்பிதழ், செப்டம்பர் 2016, இதழ் 3.

கட்டுரையாளர் : உதவிப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்