ஈரோடு,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைகட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி செப்.10 ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் மற்றும் எதிர்கட்சியினர் கூட்டாக அறைகூவல் விடுத்திருந்தனர். அதனடிப்படையில் திங்களன்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள மேட்டூர் சாலையில் நடந்தமறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, சோஷலிஸ்ட் யூனிட் சென்டர் ஆப் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, எஸ்.சுப்ரமணியன், சி.பரமசிவம், ஆர். கோமதி, ஆர்.விஜயராகவன்,ஈரோடு நகரச் செயலாளர் சுந்தர்ராஜ் மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரசன்னா, அண்ணாதுரை, சகாதேவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகி வி.பி.குணசேகரன், சிபிஐஎம் (எம்எல்) மாவட்டசெயலாளர் கோவிந்தராஜ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடம்பூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் மலை வட்டார செயலாளர் சி.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டகுழு உறுப்பினர் பி.சடையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர். சத்தியமங்கலத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் தாலுகா செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். சிபிஐ ஸ்டாலின் சிவக்குமார், சுடர் நடராஜன், சிபிஎம் நகர செயலாளர் பி.வாசுதேவன் உட்பட பலர் கலந்து கொண்டு மறியலில்ஈடுபட்டு கைதாகினர். அந்தியூரில் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துச்சாமி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்டக்குழுஉறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து மற்றும் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெருந்துறை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜி.ராஜன், சிபிஐ சார்பில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் துளசிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குணவலவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பவானி அந்தியூர் பிரிவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.ஜெகநாதன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், பி.பி.பழனிசாமி, சிபிஐ தாலுகா செயலாளர் கெ.எம்.கோபால், ப.பா.மோகன், பாலமுருகன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் கதிர்வேல், மாவட்ட செயற்குழு கல்வமணிராஜ், சிபிஐ (எம்எல்) மாவட்ட நிர்வாகி பொன் கதிரவன், மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் செம்பன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு கைதாகினர். இதேபோல், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டம் முழுவதும் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து மத்திய அரசிற்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.